திருவாரூர் மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கம் கடந்த ஜுன் 11- ஆம் தேதி துவங்கி மாவட்டம் முழுவதும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக குடவாசல் சிபிஎம் நகரக்குழ சார்பாக குடவாசல் பேரூராட்சியில் உள்ள 15- வார்டு பகுதிகளிலும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
பிரச்சார பயணத்திற்கு குடவாசல் சிபிஎம் நகரக்குழ செயலாளர் சேகர் தலைமை வகித்தார், நகரக்குழ உறுப்பினர்கள் சரவணன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சிக்கு உட்பட்ட 15- வது வார்டு தண்டலையில் துவங்கிய மக்கள் சந்திப்பு பிரச்சார கிளர்ச்சி இயக்கத்தை சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
பிரச்சாரப் பயணம் அரசூர், ஓகை ஆற்றுப்பாலம், சேங்காலிபுரம் சாலை, மாரியம்மன் கோவில் தெரு, முதலியார் தெரு, பிடாரி கோவில் தெரு, வடக்குத் தெரு, நடுத்தெரு, பள்ளிவாசல் கடைவீதி, ஏருந்தவாடி, அத்திக்கடை, குடவாசல் கடைவீதி வி.பி.சிந்தன் பேரூந்து நிலையம் அருகே பிரச்சாரத்தில் பங்கேற்று சிபிஎம் மாவட்ட செயலாளர் முருகையன் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரமூர்த்தி, மாவட்டக் குழ உறுப்பினர் லெட்சுமி உட்பட பலர் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி இயக்கத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். இதில் நகரக் குழ உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக அணிவகுத்து கலந்து கொண்டு பேரூராட்சி பகுதிகளுக்கும் 100 நாள் வேலை அமல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், பேரூராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், குடவாசல் பேரூராட்சி 15- வது வார்டு பகுதியில் அங்காடி மற்றும் இடுகாடு அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட மக்கள் சார்ந்த கோரிக்கையினை நிறைவேற்றிட மக்கள் சந்திப்பு இயக்கம் வாயிலாக தமிழக அரசுக்கும், பேரூராட்சி நிர்வாகத்திற்கும் வலியுறுத்தி கோரிக்கை விளக்க நோட்டீசை வீடு, வீடாக வழங்கினர்.