காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா வரும் ஜூலை மாதம் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு வல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிலர் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் சென்னையை சேர்ந்த பக்தர்களிடம் முறைகேடாக லட்ச கணக்கில் பணம் மற்றும் பொருட்கள் வசூல் செய்து வருவதாக வல்லக்கோட்டை கோயில் நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
மேலும் இதுகுறித்து பக்தர்கள் சிலர் கோயில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வல்லக்கோட்டை முருகன் கோயில் நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், வல்லக்கோட்டை திருக்கோயில் பெயரைச் சொல்லியோ, நடைபெற உள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் தனிநபர்களிடம் பணம் மற்றும் பொருட்கள் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், பணம் வசூலிக்கும் தனிநபர்களை காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.