திருச்சி: சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற பெண்களுக்கு மானிய விலையில் மாவு அரைக்கும் எந்திரம் வாங்க கடனுதவி அளிக்கப்படுகிறது. இது பற்றி திருச்சி கலெக்டர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், “சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மகளிரின் பொருளாதார சவால்களை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பொருளாதார ரீதியாக அவர்களை வலுப்படுத்தவும் ஒரு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின்படி 2025-2026-ம் நிதியாண்டிற்காக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான எந்திரங்கள் வாங்கும் போது மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் மானியத் தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுள்ள பெண்கள் தமிழ்நாட்டில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும் (பிறப்பிட சான்று), வயது வரம்பு-25 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும். பிறந்த தேதிக்கான சான்று, திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்களது விண்ணப்பங்களை வருகிற 14-ந்தேதிக்குள் திருச்சி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இத்திட்டத்திற்கு தகுதியுள்ள பயனாளிகள் அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருச்சி செய்தியாளர் அருள் மோகன்