கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகே உள்ள செல்லக்குட்டபட்டி ஊராட்சி புங்கம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர் வினோத் குமார் ஆகியோர் பணி செய்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் 32 மாணவர்கள் படித்து வருகின்ற நிலையில் இவர்களுக்கு காலை உணவு திட்டத்தின் மூலம் பொறுப்பாளர் முருகம்மாள் மற்றும் உதவியாளர் செம்பருத்தி ஆகியோர் உணவு சமைத்து வழங்கி வருகின்றனர்.
வழக்கம்போல இன்று காலை மாணவர்களுக்கு பொங்கல் மற்றும் பருப்பு சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் முன்னதாக நான்கு மாணவர்கள் சாப்பிட்டுள்ளனர் அப்பொழுது சாம்பாரில் பல்லி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முருகம்மாள் உடனடியாக உணவை அப்புறப்படுத்தி மண்ணில் புதைத்தார்
மேலும் உணவு சாப்பிட்ட நான்கு குழந்தைகளையும் அவரது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று பாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து மேல் சிகிச்சையாக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவர்கள் நலமுடன் உள்ள நிலையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பள்ளியில் போச்சம்பள்ளி வட்டாட்சியர் மற்றும் காவேரிப்பட்டணம் வட்டார வளர்ச்சி அலுவலர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காலை உணவு சாப்பிட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி விழுந்த சம்பவம் பெற்றோர் மற்றும் கிராமத்தின் இடையே பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.