நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய் விற்கான வழிகாட்டு தல்களும், கால அட்டவணையும் வெளியிட்ட பின்பு நிர்வாக மாறுதல் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் விதிகளுக்கு புறம்பாக முறைகேடாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிர்வாக மாறுதல்களை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில முழுவதும் மாவட்டத் தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் நிலையில், அதன் ஒரு பகுதியாக திருமங்கலம் மாவட்டக்கல்வி அலுவலகம் (தொடக்க கல்வி) முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக்கிளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் சீனிவாசன் தொடக்கக்கல்வித் துறையில் 2025-2026- ம் கல்வி ஆண்டில் முறைகேடாக போடப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளை ரத்து செய்தல், முறைகேடாக போடப்பட்டுள்ள நிர்வாக மாறுதல் ஆணைகளின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர் களின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல், ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கினை விரைந்து முடித்து ஆசிரியர்களின் பதவி உயர்விற்கான மாறுதல் கலந்தாய்வினை நடத்துதல், 2025-2026- ம் கல்வியாண்டில் பணி ஓய்வு பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு உரிய தகுதியின் அடிப்படையில் பணி மறு நியமன ஆணைகளை நடப்புக் கல்வி ஆண்டின் இறுதி வேலை நாள் வரை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை குறித்து விளக்கி பேசினார்.

மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் முருகன் சிறப்புரை ஆற்றினார். தோழமைச் சங்க நிர்வாகிகள் பாஸ்கர், ராமசாமி, நவநீதகிருஷ்ணன், சந்திரன், கணேசன், சந்திரபோஸ், சுரேஷ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டப் பொருளாளர் எமிமாள் ஞானசெல்வி நன்றி கூறினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், வட்டார நிர்வாகிகள், மாவட்டத் துணை நிர்வாகிகள், கல்வி மாவட்ட நிர்வாகிகள், மாநில செயற்குழு உறுப்பினர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *