மலை கிராமங்களில் கூடுதல் பிஎஸ்என்எல் டவர் அமைக்கப்படும் எம்பி தகவல்

திருப்பத்துார்,

திருவண்ணாமலை எம்பி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் மலை கிராமங்கள் உள்ளது. மேலும் தி.மலை எம்பி தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்துார் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்துார் இரு சட்டசபை தொகுதிகளில் உள்ள ஏலகிரி மலை பஞ்.ல் 14 மலை கிராமங்களும், புதுார் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய பஞ்.களில் 32 என மொத்தம் 46 மலை கிராமங்கள் உள்ளன.

மேலும் மலை கிராம மக்கள் பயன்பாட்டிற்காக பல இடங்களில் பிஎஸ்என்எல் டவர் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பிஎஸ்என்எல் சிக்னல் சரிவர கிடைக்காததால் தொலைத்தொடர்பு துண்டித்தது.இது குறித்து மலை கிராம மக்கள் தி.மலை எம்பி அண்ணாதுரையிடம் பிஎஸ்என்எல் சிக்னல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் கூடுதலாக டவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே தற்போது மலை கிராமங்களில் உள்ள அனைத்து பிஎஸ்என்எல் டவர்களில் இருந்தும் சிக்னல் தெளிவாக கிடைக்க தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மலை கிராம மக்கள் எம்பியை செல்போனில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து எம்பி கூறுகையில்,தி.மலை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவில் மலை கிராமங்கள் உள்ளது. மேலும் தொகுதி முழுவதும் கிட்டத்தட்ட 99 பிஎஸ்என்எல் டவர் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 33 டவர் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் மலை கிராமங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் கூடுதலாக 66 பிஎஸ்என்எல் டவர் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *