கோலாகலமாக நடைபெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.

இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். காசிக்கு இணையான 6 ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலம் இதுவாகும்.

மேலும் பல சிறப்புகள்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது.

இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். தீர்த்தம், தல விருட்சம் அனைத்தும் மூன்றாக அமைந்துள்ளது. பட்டினத்தடிகளார் சிவதீட்சை பெற்ற, மெய்கண்டார் அவதரித்த இத்தலம் ஆதி சிதம்பரம் என போற்றப்படுகிறது.

9 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் குடமுழுக்கு

இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும் வெகுவிமரிசையாக மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த ஆண்டு தமிழக அரசு 2 கோடியே 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், நன்கொடையாளர்கள் 25 கோடி ரூபாய் அளவில் செலவு செய்து பிரம்மாண்டமான அளவில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்றன.

இதற்கு முன்னர் இந்த ஆலயத்திற்கு கடந்த 2016 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது 9 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கிழக்கு கோபுர வாசல் அருகே பிரமாண்டமான 95 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, கடந்த ஜூன் 30 -ம் தேதி பூர்வாங்க பூஜைகள் கோயிலில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜுலை 3-ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை துவங்கி தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று 8 -ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று மஹா பூர்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் யாகசாலை வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார் தலையில் சுமந்து மேளதாள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம்வந்து கோயில் கோபுர கலசங்களை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத சரியாக காலை 9.5க்கு கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக காலை 5.30 மணிக்கு கோயிலை சுற்றி உள்ள பரிவார மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நன்னீர் உற்று நிகழ்வு நடைற்றது குறிப்பிட்ட தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *