கோவை மாவட்டம் துடியலூர். பகுதியில் நடைபெற்ற அதிமுக பிரச்சார பொதுக்கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி பல்வேறு அரசியல் குற்றச்சாட்டுகளையும், எதிர்கால நோக்கையும் பொதுமக்களுக்கு வெளியிட்டார்.
மேட்டுப்பாளையம் காரமடை முதல் பெரியநாயக்கன்பாளையம் வரை பயணித்தபோது மக்கள் அளித்த அமோக வரவேற்பு, அதிமுகவின் எதிர்வரும் வெற்றிக்கு வலுவான சாட்சியாக இருப்பதாக கூறினார். “மக்கள் என்னை மக்களாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுடன் வாழ்ந்து, அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து செயல்படுகிறேன். அதிமுக என்பது ஏழை எளிய மக்களுக்காக உருவான கட்சி,” என்றார்.
திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிச்சாமி, “வீட்டு வரி, மின் வரி, குடிநீர் வரி என அனைத்து விதமான வரிகளும் 50 முதல் 100% வரை உயர்த்தியுள்ளது. இது மக்களை அதிகமாக சுமைப்பட்டுள்ளதாக கூறும் வகையில், மக்கள் விரோத நடவடிக்கையாகும். வரி மேல் வரி போட்டு மக்களைத் துன்புறுத்தும் திமுக அரசு வீடுகளுக்கே அனுப்பப்படும் நேரம் இது,” எனக் குற்றம் சாட்டினார்.
அதிமுக ஆட்சி மீண்டும் அமைக்கப்படும் என்பதில் நம்பிக்கை தெரிவித்த அவர், “2011 முதல் 2021 வரை சிறந்த ஆட்சியை வழங்கிய அதிமுக, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் எதிர்பார்ப்புகளை மீறி நலத்திட்டங்களை வழங்கும். மக்கள் நலனே எங்கள் முக்கிய நோக்கம்,” என உறுதியளித்தார்.
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் – இதுவே நமது தாரகமந்திரம். வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க மக்களிடம் நான் மனமுவந்த கோரிக்கை விடுக்கிறேன்” என்று வலியுறுத்தினார்.
இதன் மூலம், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது உறுதி எனும் நம்பிக்கையோடு, கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் உற்சாகத்தில் குமிழ்ந்தனர்.