ஓலைப்பாடி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
பெரம்பலூர்.அக்.14.”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஜெமீன் ஆத்தூர், ராமலிங்கபுரம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு ஜெமீன் ஆத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும், குன்னம் வட்டத்திற்குட்பட்ட ஓலைப்பாடி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இன்று (14.10.2025) நடைபெற்றது.
இரண்டு முகாம்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ”இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மக்களின் இருப்பிடத்திற்கே சென்று மக்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றுவதே ஆகும். எனவே தொடர்புடைய அலுவலர்கள் இதன் மீது தனி கவனம் செலுத்தி மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்” என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, இ-சேவை மையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட 15 அரசுத்துறைகள் பங்கேற்று 46 வகையான சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கிட ஏதுவாக ”உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், இன்று பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என பார்வையிட்டு, பொதுமக்களை அவர்களின் கோரிக்கைக்கு தொடர்புடைய துறைகள் உள்ள அறைக்கு அழைத்துச் செல்ல மகளிர் சுய உதவிக்குழுக்கள், தன்னார்வலர்கள் மூலமாக முறையாக வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றதா என்றும், பெறப்படும் மனுக்கள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றதா என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் வருவாய் துறையின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், இணைய வழி பட்டா மாறுதல்களையும், வருமானச்சான்று, ஆதரவற்ற விதவைச் சான்று உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றுகளையும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து தடுப்பு துறையின் மூலம் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்து பெட்டகங்கள், வேளாண் துறையின் சார்பில் நானோ யூரியா மற்றும் கேழ்வரகு விதை தொகுப்பு உள்ளிட்ட அரசு நலதிட்ட உதவிகளை பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மனுக்களின் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து தீர்வு கண்ட அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டினார்.
நலத்திட்ட உதவிகள் பெற்ற பயனாளிகள் தெரிவிக்கையில், “அரசு அலுவலகங்களை நாங்கள் தேடிச் சென்ற காலம் மாறி அரசு அலுவலர்கள் அனைவரும் நாங்கள் இருக்கும் கிராமத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அதை நிறைவேற்றி தரும் இந்த சிறப்பு வாய்ந்த முகாமினை வழங்கிய முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்” என்றனர்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குணசேகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, வட்டாட்சியர்கள்முத்துக்குமார் (ஆலத்தூர்), சின்னதுரை (குன்னம்), ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.