நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர் தீர்த்தக் குடங்களுடன் முற்றுகையிட்டு, வளையபட்டி பகுதியில் சிப்காட் அமைக்க கூடாது என வலியுறுத்தி, நூதன முறையில் மனு அளித்தனர்*.
நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, N. புதுப்பட்டி, அரூர், பரளி ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில், நன்கு விளையக்கூடிய வேளாண் நிலங்கள் இருப்பதால், அப்பகுதியில் சிப்காட் அமைக்கக் கூடாது என சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், விவசாயிகள் உள்ளிட்டோர் கடந்த 3 ஆண்டுகளாக, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மாநில அரசு அதற்கு செவிசாய்க்காமல் சிப்காட் அமைப்பதற்கு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, பெண்கள் & விவசாயிகள் உள்ளிட்ட சிப்காட் எதிர்ப்பு இயக்கத்தினர், அந்த அரசாணையை இரத்து செய்து, சிப்காட் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு, 50 தீர்த்தக் குடங்களை சுமந்து வந்து, மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ. சுமனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது, பயிர் செய்கின்ற புஞ்சை நிலங்களை கையகப்படுத்துவதில்லை என்றும் அதேபோல வறண்ட புஞ்சை நிலங்களில், பயிர் செய்ய முடியாத சாகுபடிக்கு உதவாத நிலங்கள் இருக்கும் இடத்தில் மட்டுமே சிப்காட்டிற்கு பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசு, எங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், சிப்காட் திட்ட அலுவலரும், வளையப்பட்டி பகுதியில் மலை, மலைக் குன்றுகள், கரடுகள் இருக்கும் இடத்தில் சிப்காட் அமைக்க வேண்டாம் என அறிக்கை அளித்துள்ளார்.
ஆனால் ஆளும் கட்சியினர், பண பலம் படைத்தவர்கள், அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் சட்டத்திற்கு புறம்பாக நிலங்களை கையகப்படுத்துவதற்கு சிப்காட் நிறுவனம் முயற்சி எடுத்து வருகிறது.
மேலும், நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே சிட்கோவிற்கு எடுக்கப்பட்ட நிலங்கள் பல வருடங்கள் ஆகியும் பல கோடி ரூபாய் செலவு செய்து எந்த ஒரு தொழிற்சாலையும் அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அரசு பணம் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.
சிப்காட் அமைப்பதற்கான அரசாணை வெளியிடுவதற்கு முன்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், கிராம ஊராட்சிகள், கால்நடை, நீர்வளம் உள்ளிட்ட அரசு துறைகளிடம் எவ்வித முன் அனுமதியும் பெறாமல் அரசாணை வெளியிட்டுள்ளார்கள்.
எனவே, விவசாயிகள், கால்நடைகள், இயற்கை சுற்றுச்சூழல், விளைநிலம் ஆகியவற்றின் நலனைக் கருத்தில் கொண்டு, வளையப்பட்டி பகுதியில் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்தில், சிப்காட் அமைக்க கூடாது. முன்னரே வெளியிடப்பட்டுள்ள அரசாணையை இரத்து செய்து, சிப்காட் அமைக்கும் கெட்டதையும் இரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
பெண்கள் விவசாயிகள் ஆகியோர் அளித்த கோரிக்கை மனுவை ஏற்றுக் கொண்ட நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர். ரெ. சுமன், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மேலும், வருகின்ற வியாழக்கிழமை நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள துணை முதலமைச்சரை சந்தித்து இதுகுறித்த முறையீடு செய்து கோரிக்கை மனு அளிப்பதற்கும் வழிவகை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
அப்போது, தீர்த்தக் குடம் கொண்டு வந்த பெண்கள், குடத்தில் இருந்த நீரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பூங்காவில் செடிகளுக்கு ஊற்றினர். நீரின்றி செடிகள் வாடுவதைப் போல தங்கள் கோரிக்கைகளும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதாக பெண்கள் பேசிக்கொண்டனர்.
பேட்டி: N. பாலசுப்பிரமணியன்,
பொதுச் செயலாளர், விவசாயம் முன்னேற்ற கழகம், நாமக்கல்.