நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், திருச்செங்கோடு வட்டம், அனிமூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.
இந்த மனுவில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் அனிமூர் கிராமத்தில், குடிநீர் கிணற்றுடன் கூடிய சர்வே எண்: 14 நிலத்தில் இருந்த, 100 பனை மரங்களில் 40 பனை மரங்கள், அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக வெட்டப்பட்டு மரங்கள் இருந்த இடத்தில் 11 குடிசைகள் போட்டுள்ளனர். மேலும், அந்த கிணற்றில் நீர் இறைத்து அருகில் இருந்த 10 வீட்டினர் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தற்போது அந்த கிணற்றையும் சட்டத்திற்கு புறம்பாக மூடிவிட்டார்கள்.
மேலும் இது சம்பந்தமாக, கடந்த 3-ம் தேதி மொளசி வருவாய் ஆய்வாளர் மற்றும் அடையாளம் தெரியாத 20 பேர், மீதி உள்ள பனை மரங்களை வெட்டி அத்துமீறி குடிசை போடுவதற்கு சர்வே எண்: 14 நிலத்திற்கு வந்தனர். அப்போது ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி இது சம்பந்தமாக நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் இது தொடர்பாக மொளசி பிர்க்கா வருவாய் ஆய்வாளர் பிரியா என்பவரிடம் பனை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெறப்பட்ட விபரம் கேட்டதற்கு, எந்தவிதமான அனுமதி சான்றிதழ் / ஆவணங்களை அவர் கொடுக்கவில்லை. அப்போது வருவாய் ஆய்வாளர் மற்றும் அவருடன் வந்த அனைவரும் திரும்பி சென்று விட்டார்கள்.
எனவே அனிமூர் கிராமம் சர்வே எண்: 14 நிலத்தில், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட மொளசி வருவாய் ஆய்வாளர் பிரியா மற்றும் அவருடன் வந்த 20 அடையாளம் தெரியாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த நிலத்தில் மீதமுள்ள பனை மரங்களை வெட்டி அகற்றுவதற்கு ஆட்சேபனை தெரிவித்துக் கொள்வதாகவும் மனுவில் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வின் போது அனிமூர் கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.