நாமக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின்கீழ், அரசு நலத்திட்ட கையேடுகள் வழங்கும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி, பாராளுமன்ற உறுப்பினர்கள் V.S. மாதேஸ்வரன், K.R.N. இராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அனைவரும் விடுபடாமல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை வருகின்ற 15-ம் தேதி முதல் மாநில அரசு நடத்த உள்ளது.
இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரசு நலத்திட்டங்கள் கையேடு, துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணிகளை நாமக்கல் மாநகராட்சி, சின்னமுதலைப்பட்டி சமுதாயக் கூடம் அருகிலுள்ள வீடுகளுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. துர்கா மூர்த்தி தலைமையில், பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் V.S. மாதேஸ்வரன், K.R.N. இராஜேஷ்குமார் ஆகியோர் இன்று (8.7.2025) வழங்கி, பார்வையிட்டனர்.
அப்போது, அரசின் திட்டங்களில் இதுவரை பயன்பெறாமல் இருந்தாலோ, மகளிர் உரிமைத்தொகை பெறாமல் இருந்தாலோ வருகின்ற 15-ம் தேதி முதல் தொடங்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள கையேட்டில் உள்ள மனுவை பூர்த்தி செய்து வழங்கலாம் என பொதுமக்களிடம் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் தெளிவுபடுத்தினார்.
அப்போது, நகராட்சி நிர்வாகம்-குடிநீர் வழங்கல், வருவாய்-பேரிடர் மேலாண்மை மருத்துவம் மக்கள் நல்வாழ்வு, எரிசக்தி, கூட்டுறவு உணவு – நுகர்வோர் பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் நலம், ஆதிதிராவிடர் பழங்குடியின நலம், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலம், தொழிலாளர் நலன், திறன் மேம்பாடு, வீட்டு வசதி – நகர்ப்புற வளர்ச்சி, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சமூக நலன்-மகளிர் உரிமை, தகவல் தொழில்நுட்பவியல்- டிஜிட்டல் சேவைகள், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை ஆகிய 13 துறைகளில் 43 சேவைகள் பெறுவதற்கான வழிமுறைகளை எடுத்துக் கூறினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார், நாமக்கல் மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம பகுதிகளில் ஜூலை 15-ம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடங்கப்பட்டு நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது. தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று அதற்கான விண்ணப்பங்களை வழங்குவார்கள். இதுவரை மகளிர் உரிமைத்தொகை பெறாதவர்கள், அரசின் விதிமுறை தலைவர்களுக்கு ஏற்ப மனு அளித்து பயன்பெறலாம். இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுபவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் மகளிர் உரிமைத்தொகை பெறலாம் என்றார்.
மேலும் கூறிய அவர், நாமக்கல் மாவட்டத்திற்கு வருகின்ற 10-ம் தேதி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து, அனைத்து துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடத்தி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.
மேலும், நாமக்கல் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக சார்பில், நாளை 9.7.2025 மாலை நாமக்கல்- பரமத்தி சாலை, திருச்செங்கோடு சாலை பகுதிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.
அதனைத் தொடர்ந்து, நாளை மறுநாள் 10.7.2025 வியாழக்கிழமை காலை 10:00 மணிக்கு, துணை முதல்வர், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து அரசு துறைகள் சார்பில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ள ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, அரசு துறைகளின் செயலாக்கம், பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற மக்களுக்கு நகர்ப்புற பட்டா (முதல் கட்டம்) வழங்கும் பணிகள் மற்றும் வீட்டு மனை பட்டா, அரசு நலத்திட்ட உதவிகள் 2000-க்கும் மேற்பட்டோருக்கு வழங்க உள்ளார்.
மேலும், நண்பகல் 12:00 மணிக்கு திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3:00 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நவீன உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்து, நாமக்கல் மாவட்டம் சார்பில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார். பின்னர் மாலை 5:00 மணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாமக்கல் மாவட்ட நிகழ்ச்சிகளை நிறைவு செய்து கொண்டு, சேலம் விமான நிலையம் செல்வார் என்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், நாமக்கல் மாநகராட்சி மேயர் து. கலாநிதி, துணை மேயர் செபூபதி, ஆணையாளர் சிவக்குமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.