இந்தியாவில் முதல் முறையாக Dente SIMtoCARE எனும் அமைப்பு மூலம் அதிநவீன பல் சிகிச்சை கற்றல் & செய்முறை அனுபவத்தை வழங்கும் கல்லூரியாக மாறியது ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அதிநவீன சிமுலேட்டர் அறை துவக்கப்பட்டது.
இந்த சிமுலேட்டர் அறையில் பல் சிகிச்சை பயிற்சிக்கான வீ .ஆர். என்றழைக்கப்படும் வெர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம், ஏ.ஆர். என்றழைக்கப்படும் ஆகுமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பம் மற்றும் ஹாப்டிக் டெக்னாலஜி ஆகியவை இணைந்த அதிநவீன Dente SIMtoCARE அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக இந்த தொழில்நுட்பத்தை கோவையைச் சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி மற்றும் மருத்துவமனை அதன் வளாகத்தில் நிறுவியுள்ளது.இதன் மூலம் டென்டல் பயிற்சி பெறும் மாணவர்களின் கற்றல் அனுபவம் மிகவும் ஆழமாகவும், மிக தெளிவாகவும் இருக்கும்.
இந்த அதிநவீன அமைப்பு கொண்ட வளாகத்தை இன்று கல்லூரியில், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு.ஆர்.சுந்தர் துவக்கி வைத்தார்.
இந்த துவக்க நிகழ்வில் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் குமார், மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா டென்டல் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தீபானந்தன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அழகப்பன் கலந்து கொண்டனர்.
இந்த அதிநவீன அமைப்பு மூலம் பல் சிகிச்சை பற்றி பயிலும் மாணவர்கள்
செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு சூழலில் பற்கள் தொடர்பான பாதிப்புகள் உள்ளவர்களுக்கு வெவ்வேறு சிகிச்சை வழங்குவது எப்படி என்பதை நேரில் நின்று கற்பதை போல உணர்ந்து கற்க முடியும். இது கற்றல் அனுபவத்தை பல மடங்கு மேம்படுத்தக்கூடிய ஒரு உயர் தொழில் நுட்பம் என்பதால் இதன் மூலம் மாணவர்கள் சிறந்த முறையில் செய்முறை அனுபவத்தையும் பெற முடியும்.
இந்த அதிநவீன Dente SIMtoCARE அமைப்பில் பல் சிகிச்சை தொடர்பான அனைத்து சிகிச்சை முறைகளை பற்றி கற்கக்கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே பல் சிகிச்சை தொடர்பான 150 வித பாதிப்புகளும், அதற்கான தீர்வுகளும் பற்றிய செயற்கை சூழல் மற்றும் செய்முறை தரவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பல் சிகிச்சை தொடர்பான புதிதான தரவுகளையும் இதற்குள் சேர்க்கவும், அதை மதிப்பீடு செய்து, மாணவர்களுக்கு விளக்கவும் முடியும்.
நிஜ உலகில் பல் சிகிச்சை வழங்குவதற்கு முன்பு இது போன்ற மெய் நிகர் தொழில்நுட்பங்கள் மூலம் ஆழமான கற்றல் அனுபவத்தை பெறுவதனால் மாணவர்களின் திறனை பன்மடங்கு மேம்படுத்தக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.