வலங்கைமான் பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகன மேடை கட்டுமான பணி நிறைவு நிலையை அடைந்ததை அடுத்து விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் இறப்பின் சதவீதமும் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு சராசரியாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர்.
இதனால் இங்கு நவீன எரிவாயு தகன மேடை அமைக்க வேண்டும் என பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன் மற்றும் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் விருப்பாச்சிபுரம் – தில்லையம்பூர் சாலையின் அருகே குடமுருட்டி ஆறு தென்கரையில் பேரூராட்சி சார்பில் முன்னதாக மயான கொட்டகை அமைக்கப்பட்டுள்ள இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின்2023- 2024 நிதியாண்டில் நவீன எரிவாயு தகன மேடை ரூ. 1.65 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
தற்போது பணிகள் முடிவு நிலையை எட்டியதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. தகன மேடையில் வலங்கைமான் பேரூராட்சி 15 வார்டுகளில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.
சமத்துவ தகன மேடை வலங்கைமான் பேரூராட்சியில் ஜாதிக்கு ஒரு சுடுகாடு, இடுகாடு என தனித் தனியாக உள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகளும் இருந்து வருகிறது. இந்நிலையில் அனைவரும் சமத்துவமாக பயன்படுத்தக் கூடிய நவீன எரிவாயு தகன மேடை கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் மூலமாக கட்டப்பட்டு வருவது அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.