திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகமும், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும், உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்கள்.
இல்லத்தின் முகப்பிலேயே வைத்துள்ள புழங்கு பொருட்கள் காட்சியகத்தில் உரல் உலக்கை குந்தாணி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.புழங்கு பொருட்கள் காட்சியகத்தை
திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ், உதவிப் பேராசிரியர் முனைவர் ஜா.சலேத், முதுகலை மாணவர் சே. பிரான்சிஸ் ஆன்டனி, இளங்கலைத் தமிழ் மாணவர் ச.ஆசிக் டோனி
உள்ளிட்டோர் பார்வையிட்டு உரல் உலக்கை குந்தாணி குறித்து கேட்டறிந்தனர்.
உரல் உலக்கை குந்தாணி குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
டங்..டங்..டங்’ என உரலில் தானியங்களை இடிக்கும் ஓசை ஒரு தலைமுறையினர்க்கு முன்பு இவையெல்லாம்தான் கிராமத்து மக்களுக்கு அதிகாலை சங்கீதம்.
அன்றன்றைக்கு உணவுக்கு வேண்டிய கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்களை அன்றன்றைக்கே உரலில் இட்டு, இடித்துத்தான் தயார் செய்வார்கள்.
நாவில் ஊறும் அந்த சிறுதானிய உணவுகள் எங்குமே உண்ணக் கிடைக்காது. கைக்குத்தல் அரிசியை மண்பானையில் பொங்கி வடித்து உண்ணும் உணவுதான் உண்மையில் தேவாமிர்தம். அப்படி சுவையான உணவைக் கொடுத்த, உரல், உலக்கை வழக்கொழிந்து விட்டது..
நவீன கிரைண்டரும், மிக்சியும். என்னதான் இருந்தாலும், பாரம்பர்யத்தைக் கைவிடாத பல கிராமங்களில் இன்றைக்கும் புழங்கிக் கொண்டிருக்கின்றன ஆதிகாலத்து கருவிகள். நாகரிகம் முழுவதும் ஆக்கிரமிக்காத, பாரம்பர்யமும் முழுதாக அழிந்து போகாத கிராமங்கள் தமிழ்நாட்டில் இன்னமும் உண்டு. நவீனத்துக்கும் பாரம்பர்யத்துக்கும் பாலம் போடுபவை இது போன்ற கிராமங்கள்தான். வயக்காட்டு வேலைக்குப் போறவங்கசாயங்காலம் கம்பை உரல்ல போட்டு இடிச்சு வெச்சு, காலையில கூழ் காய்ச்சு வெயில்ல வேலை பார்க்கிறபோது கம்பங்கூழ் அருந்துவார்கள்.
உரல்ல இடிச்சு செய்ற கூழ், பலகாரத்துல கிடைக்கிற ருசி, மிக்சியில, கிரைண்டர்ல ஆட்டினா கிடைக்காது.
தலைமுறை தலைமுறையா பார்த்த கற்கால கருவிக்கு மின்சார செலவில்லை. கையில தெம்பு இருந்தா போதும். தினமும் வேலை செஞ்சு கம்பு, சோளம்னு சாப்பிடுறதால யாருக்கும் தெம்புல குறைச்சல் இல்லை. உரல்ல இடிச்சு வேலை செய்து உண்ட யாருக்கும் ஊளைச்சதை இருக்காது. ரத்தக் கொதிப்பு, சர்க்கரைனு எந்த ஆரோக்கிய குறைபாடும் இல்லாம திடகாத்திரமா இருந்தாங்க.
மர உரல் முப்பாட்டன் காலத்துல இருந்து இருக்குது. தினை, கேப்பை, காபிக்கொட்டை எல்லாத்தையும் இதுலதான் இடிப்பார்கள். இடம் மாறி மாறி தூக்கிட்டுப் போக தோதா இருக்கும். கல் உரல்ல குத்தும்போது தானியங்கள் மாவு மாதிரி ஆகிடும்.மர உரல்ல முழுசா உடையாம குருணை குருணையா இருக்கும். இதுல கூழ், கஞ்சி காய்ச்சி குடிச்சா ருசியா இருக்கும்.
.பழங்காலத்தில் விளைபொருட்களை, உணவுப்பொருளாக மாற்ற, பாறைகளில் சிறிய குழிகளை உருவாக்கி, அதில் நீளமான தடியைப் பயன்படுத்தி இடித்தார்கள். காலபோக்கில் பாறைகளில் இருந்து கற்களை வெட்டி எடுத்து, தனியாக உரல் போன்ற அமைப்பை ஏற்படுத்திக் கொண்டதுடன்… உறுதியான மரங்களில் இருந்து உலக்கைகள் தயாரித்துப் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
பனை, தேக்கு, மருதமரம், கடம்பமரம் ஆகிய உறுதியான மரங்களில்தான் உலக்கை செய்தனர். நுனியில் பிளவு ஏற்படாமல் இருக்க பூண் பூட்டி இருப்பார்கள். மஞ்சள், மிளகாய் ஆகியவற்றை இடிக்கும் உலக்கையில் பூண் இருக்காது. இதை கழுந்துலக்கை’ என்பார்கள்
உரல் என்பது அரிசி முதலான தானியங்களைக் குற்ற, இடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது மூன்று அடி வரை உயரமுள்ள ஏறத்தாழ ஓர் அடி விட்டமுள்ள மரத்தினால் அல்லது கருங்கல்லினால் ஆக்கப்பட்டிருக்கும். இதன் ஒரு பக்கத்தில் அரை அடி முதல் ஓர் அடிவரையான ஆழத்தில் ஒரு குழி போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்தக்குழிக்குள் அரிசி முதலான தானியங்களை இட்டு உலக்கை கொண்டு குற்றுவார்கள். இப்படிச் செய்வதால் அதற்குள் இடப்பட்ட தானியம் துகள்களாக்கப்பட்டுப் பின்னர் பொடியாக்கப்படும்
குந்தாணி என்பது ஓர் வசவுச் சொல்லாக தெரியும். குந்தாணி என்றால் நெல் சிதறாமல் இருக்க விளிம்புடன் உள்ள உரல் ஆகும்.
உலக்கை கொண்டு உரலில் உள்ள தானியத்தை இடிக்கும் பொழுது தானிய மணிகள் வெளியே சிதறாமல் பாதுகாக்கும் வாயகன்ற புடைப்பான அமைப்பினை குந்தாணி என்பர்.
குந்தாணி மேல்பகுதியில் வாய் அகன்றும் கீழ்பகுதியில் உரலுடன் பொருந்துமாறு ஒடுங்கி புடைப்பான வளையம் போன்ற வடிவத்தில் உரலைச் சுற்றி ஒரு தடுப்பைப் போல பயன்படுகிறது.குந்தாணி கற்களிலும், மரத்திலும் பயன்பாட்டில் இருந்தன.
முற்காலத்தில் உரல்கள், குந்தாணி ஆகியவை கருங்கற்களால் செய்யப்பட்டது.
உலக்கைகள் மரத்தால் செய்யப்பட்டு இரு முனைகளிலும் பூண் போடப்பட்டிருக்கும். உலக்கைப் பூண் என்பது மரத்துக்கு போடப்படும் இரும்புக் கவசம் ஆகும்.பிற்காலத்தில் வேம்பு, பாலை போன்ற மரத்தில் செய்யப்பட்ட உரல்களும் வழக்கில் இருந்தன.உரல், உலக்கை, குந்தாணி மூன்றும் ஒரே தொகுப்பைச் சேர்ந்த கருவிகள் ஆகும்.
உரலும் உலக்கையும் உரலில் தானியங்களைப் பொடியாக்குவதுபோல் சில தானியங்களின் வெளிப்புற உமியை நீக்குவதற்கும் பயன்படுத்துவார்கள். எடுத்துக்காட்டாக, நெல் மணிகளை உரலில் இட்டு சிறிதுநேரம் குற்றுவதன் மூலம் அரிசியும் உமியும் வெவ்வேறாகப் பிரிக்கப்படும். அதன் பின்னர் சுளகு முறம் பயன்படுத்தி புடைப்பதன் மூலம் அரிசியையும் உமியையும் வேறாக்குவர்.
கல் உரல் மற்றும் மர உரல் இரண்டும் தானியங்களை இடிக்கப் பயன்படும் கருவிகளாகும். கல் உரல் என்பது கடினமான கல்லால் செய்யப்பட்ட உரல். மர உரல் என்பது மரத்தால் செய்யப்பட்ட உரல். இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், கல் உரல் அதிக நேரம் நீடித்து உழைக்கும், அதே நேரத்தில் மர உரல் எளிதில் உடைந்து போகும் வாய்ப்பு உள்ளது.
கல் உரல் கல்லினால் செய்யப்பட்டிருப்பதால், அதிக நேரம் உழைக்கும் தன்மை கொண்டது.தானியங்களை இடிக்கும்போது, மாவாக சீராக அரைக்கப்படும். மர உரல் மரத்தால் செய்யப்பட்டிருப்பதால், கல் உரலை விட எளிதில் உடைந்து போகும் வாய்ப்பு உள்ளது.தானியங்களை இடிக்கும்போது, மாவாக இல்லாமல் குருணையாக வரும்.
மர உரல் அதிக சக்தி வாய்ந்தது, ஆனால் கல் உரலைப் போல நீண்ட காலம் உழைக்காது.சிலர் மர உரலை பாரம்பரிய முறையில் பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் அது தானியங்களின் சுவையை தக்கவைக்கும் என்று நம்புகிறார்கள்.
என்றார்.