துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி ஊராட்சியில் உள்ள சித்திரப்பட்டி கிராமத்தில் பழைய இடத்திலேயே வார சந்தை நடைபெறும் என்று பிடிஒ தெரிவித்துள்ளார்.
சித்திரப்பட்டியில்கடந்த 15ஆண்டுகளாக ஸ்ரீ மாரியம்மன் கோயில் அருகில் தெருக்களில் ஞாயிற்றுக்கிழமை தோறும் காய்கனி வார சந்தை நடைபெற்று வந்தது.வார சந்தைக்கான ஏலம் எடுப்பதில் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டதால் சித்திரப்பட்டியில் பழைய இடத்தில் வாரச்சந்தை நடத்த கிராமத்தினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த ஞாயிற்று கிழமை முன்னறிவிப்பின்றி வாரச்சந்தை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
இதனால் அப்பகுதி பெண்களும், சுற்றுவட்டார கிராம மக்களும், வியாபாரிகளும், விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாவதாகவும், பெண்கள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்படும் என்பதாலும் மீண்டும் அதே இடத்தில் வார சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுராபுரி ஊராட்சி மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் மதுராபுரி செந்தில்குமார், ரஹமதுல்லா,தம்பிதுரை,சுகுமாரன்,பிரசாத் குமார் ,மா.குமார்,கவியரசன்,சக்ரவர்த்தி,பாண்டியன்,லெனின் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், பெண்கள் ஆகியோர் அடங்கிய ஒரு பிரிவினர் இன்று காலை 11 மணி அளவில் துறையூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனை அறிந்த பி டி ஓ ரவிச்சந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலகம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனுவை பெற்றுக்கொண்டு நாளை ஞாயிற்றுக்கிழமை அதே இடத்தில் காய்கனி வாரச்சந்தை நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புதன்கிழமை ஏலம் விடுவதற்கான ஏற்பாடுகள் செய்வதாக கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்