நாமக்கல் ஆகஸ்ட்
கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து லாரி மீட்பு
- லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் மூலமாக லாரி உரிமையாளர் பொன்னுரங்கத்திடம் ஒப்படைப்பு
கடன் வழங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் பேங்கிடம் இருந்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் லாரியை மீட்டு, லாரி உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
சென்னையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பொன்னுரங்கம் என்பவர் ஒரு டேங்கர் லாரியை விலைக்கு வாங்கி அவரே டிரைவாக அந்த வண்டியை ஒட்டிக்கொண்டிருந்தார். லாரியின் மீது கடன் எதுவும் அவர் வாங்கவில்லை. கடந்த 16.7.2025 அன்று அந்த லாரி, சேலம் வழியாக சமையல் எண்ணெய் பாரம் ஏற்றிச்சென்றது.
அப்போது ஒரு கும்பல் அந்த லாரியை தடுத்து நிறுத்தி, அந்த லாரிக்கு வாங்கியுள்ள கடன் தவனை செலுத்தாததால், லாரியை பறிமுதல் செய்வதாகக் கூறி, லாரி உரிமையாளர் பொன்னுரங்கத்தை லாரியில் இருந்து இறக்கிவிட்டு லாரியை எடுத்துச்சென்று சேலத்தில் உள்ள பார்க்கிங் மையத்தில் நிறுத்திச் சென்றுவிட்டனர்.
இது குறித்து, பொன்னுரங்கம் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார்.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராஜாமணி, மணல் லாரி கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அருள், டிரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி உள்ளிட்ட திரளான லாரி உரிமையாளர்கள், நாமக்கல் திருச்சி ரோட்டில் உள்ள சம்மந்தப்பட்ட தனியார் பேங்க் கிளைக்கு நேரில் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடனே வாங்காத லாரியை, கடன் வசூல் ஏஜென்சி மூலம் பறிமுதல் செய்ததை கண்டித்தனர். இதையொட்டி தனியார் பேங்க் நிறுவனம் லாரியை திருப்பி அளிப்பதாக ஒப்புக்கொண்டது. நேற்று அந்த லாரிக்கான கிளியரன்ஸ் ஆர்டர் பெறப்பட்டு, சேலம் பார்க்கிங் மையத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது.
இதையொட்டி நாமக்கல், கீரம்பூர் டோல் பிளாசா அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் லாரி உரிமையாள்ர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், லாரி சாவியை அதன் உரிமையாளர் பொன்னுரங்கத்திடம் ஒப்படைத்தனர்.
அவர் அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார். லாரிகளுக்கு கடன் கொடுக்கும் நிறுவனங்கள், லாரி தவனை செலுத்தாத உரிமையாளர்களுக்கு முறையான அறிவிப்பு கொடுத்து, சம்மந்தப்பட்ட போலீஸ் நிறுவனங்களுக்கு தகவல் கொடுத்த பின்பே லாரியை பறிமுதல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு உள்ளது. இதை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.