ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கருங்குளம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 25- ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது..
நேற்று முன்தினம் கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். நள்ளிரவு அக்னிச்சட்டி,கரும்பாலை தொட்டில் மற்றும் சேத்தாண்டி வேஷம் உட்பட பல்வேறு நேர்த்திகடன்கள் பக்தர்கள் செலுத்தினர். திருவிழாவின் கடைசி
நாளான நேற்று முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதனை கிராமத் தலைவரும், ஊராட்சி மன்ற தலைவருமான நாகரத்தினம் தலைமையில், யூனியன் துணை சேர்மன் அய்யனார் முன்னிலையில்,துவக்கி வைத்தனர்.
கிராம செயலாளர் செல்லச்சாமி, பொருளாளர் ஆறுமுகம், ஓய்வு எஸ்ஐ முருகன், முன்னாள் செயலாளர் முனியசாமி,முன்னாள் பொருளாளர் முத்துமணி, கிராம கணக்கர் மூர்த்தி ஆகியோர் விழாவை ஒருங்கிணைப்பு செய்தனர்.
முன்னதாக கோவில் முன்பு முளைப்பாரியை வைத்து பெண்கள் கும்மியடித்தனர். பின்னர் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து இரண்டு வரிசையாக சென்றனர். இந்த ஊர்வலம் மேளதாளம், வான வேடிக்கையுடன் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று இறுதியில் அப்பகுதியில் உள்ள ஆற்றில் முளைப்பாரியை கரைத்தனர்.