திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று காலை சுதந்திர தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட கலெக்டர் மனிஷ் தேசியக்கொடி ஏற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சமாதான புறா பறக்க விடப்பட்டது. தியாகிகள் மற்றும் தியாகிகளின் வாரிசுகள் கௌரவிக்கப்பட்டனர். சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.1 லட்சத்து ஆயிரம் மதிப்பில் பெட்ரோல் ஸ்கூட்டர், மாவட்ட தொழில் மையம் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2.65 லட்சம், தாட்கோ சார்பில் 2 நரிக்குறவ மக்களுக்கு ரூ.27.50 லட்சம், தூய்மை பணியாளர்கள் 2 பேருக்கு ரூ.1.65 லட்சம், தொழிலாளர் உதவியாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் 28 பேருக்கு ரூ.3.75 லட்சம் மதிப்பில், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பில் என்பது உள்பட வேளாண்மை துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.86 லட்சத்து 98 ஆயிரத்து 610 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மனிஷ் வழங்கினார்.
இதில் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் எஸ்.பி. யாதவ் கிரிஷ் அசோக், மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை போலீஸ் கமிஷனர் பிரவீன் கௌதம், தீபா சத்யன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், மாநகர போலீசார் 34 பேர், மாவட்ட போலீசார் 20 பேர், தீயணைப்பு வீரர்கள் 10 பேர் மற்றும் அரசு அலுவலர்கள் 149 பேருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.