எடப்பாடியார் பிரச்சாரத்தின் போது-துறையூரில் 108 வாகனத்தை தாக்கியதாக அதிமுகவினர் மீது வழக்கு பதிவு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் பேருந்து நிலையம் அருகில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரம் செய்ய நேற்று (24/08/205) மாலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் நேரத்தில் கூட்டத்திற்குள் 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது.
இதை பார்த்த அதிமுகவினர் எடப்பாடியார் வரும் நேரத்தில் வேண்டுமென்றே 108 வாகனம் வருவதாக எண்ணி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கையால் 108 வாகனத்தை அடித்துள்ளனர். போலீசார் 108 வாகனத்தை மீட்டு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் 108 வாகன ஓட்டுநர்,அதிமுகவினர் தன்னையும், கர்ப்பிணியாக உள்ள செவிலியரையும் தாக்கியதாக இருவரும் துறையூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்தையன் ஓட்டுநரிடம் விசாரித்ததில் கூட்டத்தில் இருந்த ஒரு நபர் மயக்கம் அடைந்து விட்டதாக 108க்கு போன் வந்தது,
அதனால் வந்ததாக கூறியும் அதைக் கேட்காமல் அதிமுகவினர் எங்களை தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக தெரிவித்தார். எடப்பாடியார் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சியின் போதும் வேண்டுமென்றே கூட்டத்திற்குள் ஆளில்லா 108 ஆம்புலன்ஸ் அனுப்பி இடையூறு செய்வதாக எடப்பாடி பழனிசாமி சென்ற நிகழ்ச்சியின் போது இனி கூட்டத்திற்குள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்தால் டிரைவரே அதில் பேஷண்டாக போவார் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதன் தாக்கம் தான் அதிமுகவினர் ஆவேச பட காரணம் என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அதிமுக நகர செயலாளர் அமைதி பாலு உள்பட 14 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்