இராமநாதபுரம் மாவட்டம்,
கமுதி அருகே அபிராமத்தில் உள்ள நவசக்தி விநாயகர் கோவிலில் 33-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இப்பகுதி பொது மக்கள் ஏராளமானோர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டி விரதமிருந்து வந்தனர். பின்னர் நேற்று முன்தினம் காலை விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, அனைவருக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் இரவு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
முன்னதாக முளைப்பாரியை கோவில் முன்பு வைத்து ஏராளமான பெண்கள் பக்தி பாடல் பாடி கும்மியடித்து வழிபட்டனர். பின்னர் அலங்காரம் செய்யப்பட்ட தேரில் விநாயகர் சிலை வைத்து, அதன் முன்பு முளைப்பாரி ஊர்வலம்,கரகாட்டம், மயிலாட்டம்,
வானவேடிக்கை மேள தாளத்துடன் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்திற்கு பேரூராட்சி தலைவர் ஜாகிர்உசேன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்றனர் ஊர்வலத்திற்கு பேரூராட்சி துணைத் தலைவர் மாரி, அகமுடையார் சங்க தலைவர் ஹரிராமமூர்த்தி,ஊராட்சி மன்ற தலைவர்போத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி நாகராஜன் மற்றும் ராசப்பன், கதிரேசன், செந்திவேல், கவின்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
முளைப்பாரி ஊர்வலம் அபிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்து முளைப்பரியை அப்பகுதியில் உள்ள கண்மாயில் கரைத்தனர்.
இக்கோவிலில் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து மற்றும் முஸ்லீம் மதத்தினர் பல வருடங்களாக மத நல்லிணக்கத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர்.