தென்காசியில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்-கைவிலங்குடன் வந்த விவசாயிகளால் பரபரப்பு

தென்காசி,

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு கை விலங்குடன் முட்டி போட்டுக் கொண்டு புகார் மனு கொடுக்க விவசாயிகள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வந்த தமிழர் விவசாய நீர்வள பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் ச.டேனி அருள்சிங் தலைமையில் கையில் விலங்கிட்டு கால்களை முட்டி போட்டு நடந்து வந்து புகார் மனு கொடுக்க வந்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உஉள்ளது

அந்த புகார் மனுவில் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பழையகுற்றால அருவியானது ஆயிரப்பேரி ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் தங்கள் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கும். சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலத்திற்குச் சென்று குளிப்பதற்கும் வனத்துறை தன்னிச்சையாக நேர கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே விவசாயிகள் மடையை சீர்படுத்தி விவசாயத்திற்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி தண்ணீர் கொண்டு வருவதற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நேர கட்டுப்பாட்டை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட காவல்துறை மற்றும் வனத்துறையினர் சொகுசு கார்களில் வரும் பெரிய பணக்காரர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு நேரக்கட்டுப்பாட்டு உத்தரவிற்கு மாறாக இரவு 7 மணிக்கு மேல் பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கின்றனர். ஆனால் ஏழை எளிய மக்களை சாமானியர் களை அவ்வாறு செல்ல அனுமதிப்பதில்லை.

அதேபோல் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் இரு சக்கர வாகனங்களை கூட அருவி அருகே உள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்தக்கூட அனுமதிப்பதில்லை. சுற்றுலா பயணிகளும் விவசாயிகளும் சுமார் 2 கிமீ தூரம் வரை நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 09-08-2025 அன்று இரவு 7-30 மணிக்கு மேல் சுமார் 15 க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்களில் வந்த நபர்கள் காவல்துறை மற்றும் வனத்துறையினரின் துணையுடன் பழைய குற்றால அருவிக்கு குளிப்பதற்கு சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த விவசாய சங்க நிர்வாகிகள், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், சிபிஎம் கட்சியின் தாலுகா செயலாளர் மற்றும் பொதுமக்கள் பழைய குற்றாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை சோதனைச் சாவடி அருகே சென்று அங்கிருந்த வனத்துறையினரிடம் மாலை
6 மணிக்கு மேல் பொதுமக்களை அனுமதிக்க முடியாது என்று கூறிய நீங்கள் இப்போது எப்படி 15 க்கும் மேற்பட்ட சொகுசு வாகனங்கள் அருவிப் பகுதிக்கு சென்றது எப்படி என்று கேட்டோம்.

அப்போது அங்கிருந்த வனத்துறை அலுவலர் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரியின் உத்தரவின் பேரில் தான் அந்த கார்கள் அருவிப் பகுதிக்கு சென்றதாக தெரிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து இரவு 09.30 மணிக்கு அந்த கார்கள் அருவிப்பகுதியில் இருந்து வெளியே வர சோதனை சாவடி அருகே வந்தபோது வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேள்வி கேட்ட போது குற்றாலம் காவல்துறை ஆய்வாளர் இது தவறுதான் நீங்கள் புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறோம். என்று கூறியதோடு இப்போது அந்த வாகனங்களை வெளியே அனுப்புவதற்கு அனுமதியுங்கள். என்று கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அந்த வாகனங்கள் வரிசையாக வனத்துறையின் சோதனை சாவடி விட்டு வெளியேறியது. இந்த சம்பவங்கள் அனைத்திற்கும் எங்களிடம் வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் உள்ளது.

இந்நிலையில் மறுநாள் காலையில் குற்றாலம் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் டேனிஅருள்சிங், ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர் தி.சுடலையாண்டி, தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தி.உதயகிருஷ்ணன், தென்காசி தாலுகா விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுமயில், உள்ளிட்ட 9 பேர்களின் மீது குற்றால காவல் நிலைய கு எண். 333/2025 334/2025 Under Section 189[2], 296[b], 132,351[3] 4 ன் படியும் பொய்யாக இரு வழக்குதளை பதிவு செய்துள்ளனர்.

மேற்படி சம்பவம் சம்பந்தமான முழு ஒளி, ஒலி பதிவுகளின் நகல்கள் எங்களிடம் உள்ளது. இந்த ஆட்சேபனை தெரிவித்த சம்பவத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கிட்டப்பா அந்த இடத்தில் கிடையாது. அனால் அவர் மீதும் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள வேலுமயில், கிட்டப்பா,பொன்னையா பொன்னுசாமி சுரேஷ் .சூர்யா ஆகியோர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள், வேண்டுமென்றே இவ்வழக்கில் திட்டமிட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக இந்தப் பொய் வழக்குகளை ரத்து செய்வதோடு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு 65 ஆண்டுகளாக பொதுமக்கள் 24 மணி நேரமும் குளித்து வந்த பழைய குற்றாலம் அருவியில் வழக்கம்போல் பொதுமக்கள் 24 மணி நேரமும் குளிக்க தமிழக அரசு உரிய உத்தரவு வழங்க வேண்டும் என்று அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோரிக்கை மனுவினை தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு ஆளுநர், தலைமை செயலாளர், தமிழ்நாடு உள்துறை செயலாளர் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், நீர்வளத்துறை செயலாளர் தமிழ்நாடு வனத்துறை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி உளளனர். இந்தச் சம்பவம் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *