பொள்ளாச்சி, ஆக. 29
பொள்ளாச்சியின் இரு பிரதான ரோடுகளை இணைக்கும் திட்ட சாலைக்கு ரூ. 35 கோடி மதிப்புள்ள நிலத்தை பெண் ஒருவர் நாகராட்சிக்கு தானமாக வழங்கினார்.
பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியைச் சேர்ந்த சந்திரா ஜெயராமன் என்பவர் தனக்கும், தன் மகன், மகள் ஆகியோருக்கு சொந்தமான சொத்தில் இருந்து ரூபாய் 35 கோடி மதிப்புள்ள 80 சென்ட் நிலத்தை நகராட்சிக்கு தானமாக வழங்கியுள்ளார்.
பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில், நகர தி.மு.க. வடக்கு பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன், நகராட்சி துணைத் தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலையில் நகராட்சி ஆணையாளர் கணேசனிடம் இடத்தை தானமாக வழங்குவதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார்.
இது குறித்து நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறுகையில், பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் சார்பில், மக்கள் தொகை பெருக்கம் வாகன போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு திட்ட சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 1968ம் ஆண்டு பல்லடம் ரோட்டில் தற்போதைய நியூ ஸ்கீம் ரோடு இணையும் பகுதியில் இருந்து உடுமலை ரோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே இணையும் விதமாக திட்ட சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டம் கடந்த 2009ம் ஆண்டு முழு வடிவம் பெற்றது. பல்லடம் ரோடு நியூஸ்கிம் ரோடு இணைப்பு பகுதியில் இருந்து உடுமலை ரோட்டை அடைய இந்த திட்ட சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது.
பல்லடம் ரோடு நியூ ஸ்கீம் ரோடு இணைப்பு பகுதியின் பிரதான பகுதியில் இருந்த தனி நபர் ஒருவர் அவரது இடத்தை கையகப்படுத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை ஆணை பெற்றார். இந்த வழக்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. இதனால் இந்த திட்ட சாலை அமைக்கும் பணி முடங்கிப் போய் கிடந்தது.
வழக்குத் தொடுத்த அந்த தனியார் இடத்தின் உரிமையாளர் இறந்துவிட்ட நிலையிலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சார்பாக இந்த வழக்கு நடந்து வந்தது. இப் பிரச்சனைக்கு தீர்வு காண மக்கள் பிரதிநிதிகள் ஆகிய நான் உட்பட சிலர், நகராட்சி அதிகாரிகள் என பலரும் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இதன் பயனாக அந்த சொத்தின் உரிமையாளரான சாந்தா ஜெயராமன், திட்ட சாலைக்கு தற்போதைய சந்தை நிலவரப்படி சுமார் ரூபாய் 35 கோடி மதிப்புள்ள 80 சென்ட் நிலத்தை நகராட்சிக்கு தானமாக அளிக்க முன் வந்துள்ளார்.
சாந்தா ஜெயராமன் தனது மற்றும் அவரது மகன், மகள் ஆகியோர் பெயரில் உள்ள 80 சென்ட் நிலத்தை நகராட்சிக்கு தானமாக வழங்குவதற்கான ஆவணங்களை முறைப்படி ஒப்படைத்துள்ளார். மேலும் அவர்களுக்கு சொந்தமான திருமணம் மண்டபத்திற்கு பல ஆண்டுகளாக நிலுவை வைத்திருந்த ரூபாய் 50 லட்சம் சொத்து வரியினையும் நகராட்சிக்கு ஒரே தவணையில் செலுத்தியுள்ளார்.
இதன் மூலம் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த திட்ட சாலை பணி நிச்சயம் விரைவில் தொடங்கும். அந்தப் பணிகள் முடிவடைந்ததும் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.