கலைமான் நகரில் பழங்குடி மக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்.

தென்காசி,

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே கலைமான் நகரில் பளியர் என்ற பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் அவர்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

கடையநல்லூர் அருகே கலைமான் நகரில் பளியர் என்ற பழங்குடியின மக்கள்
60-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வனத்துறை, தென்காசி ப்ரோ விஷன் கண் மருத்துவமனை, தென்காசி லைஃப் சேனல், விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தியது. முகாமை தென்காசி மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி துவக்கி வைத்தார்.

இதில், பழங்குடி மக்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் 55 பேர் கண் பரிசோதனை செய்து கொண்டனர். கண்புரை மற்றும் விழித்திரை அறுவை சிகிச்சை நிபுணர் ராஜகுமாரி பயனாளிகளுக்கு பரிசோதனை செய்து ஆலோசனைகளை வழங்கினார். கண்புரை அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் இருந்த இரு பழங்குடி பெண்களுக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்து தருவதாக மருத்துவர் ராஜகுமாரி தெரிவித்தார்.

இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு நிறுவனர் ஷேக் உசேன் செய்திருந்தார். முகாம் முடிவில் கடையநல்லூர் வனச்சரக அலுவலர் கனகராஜ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தென்காசி ப்ரோ விஷன் கண் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அஜந்த் நவீன், தென்காசி லைஃப் நிறுவனர் ஜஸ்டின் துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் மலைவாழ் மக்களுக்கு பாம்புகளையும் பாம்புகடி பற்றியும் அறிந்து கொள்ளவும் பாம்புகடி மரணமில்லாத் தமிழ்நாட்டை உருவாக்கும் குறிக்கோளை முன் வைத்து தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் பாம்புகள் புத்தகம் மற்றும் போஸ்டர் சொக்கம்பட்டி கலைமான் நகர் பளியர் குடியிருப்பு மக்களுக்கு மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை தமிழ்நாடு நிறுவனர் ஷேக் உசேன் இணைந்து அவர்களுக்கு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *