திருவாரூர் செய்தியாளர்
வேலா செந்தில்,
பணி புரியும் ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு. மறு சீராய்வு செய்ய ஆசிரியர் கூட்டணி பிரதமருக்கு கடிதம். திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கினர்.
திருவாரூர், செப்.20- பணிபுரியும் ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை மறு சீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இந்திய பிரதமருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
மனுவில், பணிபுரியும் ஆசிரியர்கள் இரண்டு ஆண்டுகளில் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இல்லையேல் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு, NCTE (National Council for Teacher Education) எனப்படும் மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வழங்கிய தகவல்கள் 2011 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கல்விக் கொள்கையின் படி, அதன் பிறகு நடந்த ஆசிரியர் நியமனங்கள் தகுதித் தேர்வு அடிப்படையில் நடைபெற்றது. தற்போதைய தீர்ப்பால் அதற்கு முன்னரே பணியில் சேர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரியும் ஆசிரியர்களும் பணியில் தொடர தகுதித் தேர்வு என்பது தேசிய கல்விக் கொள்கையில் கூறப்படாத ஒன்றாகும்.
இதனை தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு மூலம் தெரிவித்து திருத்தம் பெற்று தர வேண்டும். அதற்கான அறிவுரைகளை இந்திய பிரதமர் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் முடிவின்படி, அதில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழியாக கோரிக்கை மனு வழங்கியுள்ளனரென்று கூட்டணியின் பொதுச்செயலாளர் ரெ.ஈவேரா தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரனிடம் வழங்கிய நிகழ்வில் பொதுச்செயலாளர் ரெ.ஈவேரா, மாவட்டத் தலைவர் இரா.முருகேசன், மாநில துணைச் செயலாளர் சி.ஜூலியஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இரா.கிருஷ்ணமூர்த்தி, த.ஐயப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.