மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு சொந்தமான அனைத்து இந்து சமுதாய சங்க நந்தவனம் பவானி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. இந்துக்களின் புண்ணிய தளமாகிய காசிக்கு இணையாக இந்த நந்தவனம் கருதப்படுவதால் ஏராளமான மக்கள் இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது வழக்கம்.
குறிப்பாக,மஹாளய அமாவாசை தினத்தில் தங்களது முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து தர்ப்பணம் செய்து பவானி ஆற்றில் நீராடி வழிபாடு செய்தால் முன்னோர்களின் பூரண ஆசி கிடைக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மஹாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பொது மக்களின் வசதிக்காக முதலுதவி மையம்,ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகளும்,நீண்ட நேரம் காத்திருக்கும் மக்களுக்கு டீ,பிஸ்கட்,குடிநீர் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
மக்களை வரிசைப்படுத்தி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் பணியில் அனைத்து இந்து சமுதாய நந்தவன சங்க உறுப்பினர்கள் ஈடுபட்டிருந்தனர் இதற்கான ஏற்பாடுகளை இந்து சமுதாய சங்க நந்தவன தலைவர் ஆறுமுகம்,செயலாளர் சுகுமார்,பொருளாளர் அருணாச்சலக்குமார் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்