திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் ஆதிச்சமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 147. அட்டமங்கலம் பகுதியில் அரசு வீட்டுமனை பட்டா கொடுத்த அந்தப்பகுதியில் 11 இந்து இருளர் குடும்பத்தினர் கூடுசை வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் தெரு மின்விளக்கு வசதி மட்டுமே உள்ளது. வீடுகளுக்கு மின் இணைப்பு பெற ஊராட்சி சார்பில் வீட்டு வரி ரசீது இதுவரை வழங்கப்படாத நிலையில் மின் இணைப்பு பெற இயலாத நிலையில், இப்பகுதியில் இருந்து 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேனிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளில் படித்து வருகின்றனர். இவர்கள் இரவு நேரத்தில் வீட்டில் மின் விளக்குகள் இல்லாத நிலையில் தெரு மின் விளக்கில் படிக்கும் நிலையில் உள்ளனர்.
இதில் பல குடும்பங்கள் தங்களுடைய சாதி சான்றிதழ் பெற பல ஆண்டுகளாக அலைந்து திரியும் நிலையில் உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதியில் வசிக்கும் ராஜபாண்டி கூறுகையில் எங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கி, வீட்டு வரி ரசீது வழங்கியும், வீட்டுமனை பட்டா உள்ள இடத்தில் அரசு வீடு கட்டித் தரவேண்டும், எங்கள் வீடுகளில் மின் இணைப்பு வழங்கி எங்கள் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு ஒளி விளக்கேற்றி அவர்களின் வாழ்க்கைக்கு வழி காட்டவேண்டும் என்று கூறினார். இப்பகுதியில் உள்ள மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.