சென்னை திருவொற்றியூர் அஜாக்ஸ் பஸ் நிலையம் அருகே தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கோகுல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் இளைஞர்களுக்கு 75 சதவிகிதம் வேலைவாய்ப்பு வழங்கவில்லை, திருவொற்றியூரில் அண்ணாமலை நகர் மேம்பாலம் இதுவரை கட்டி முடிக்கப்படவில்லை, திருவொற்றியூர் பகுதியில் பொறியியல் கல்லூரி அமைக்கப்படவில்லை, வேறு பகுதியில் அமையப்பெற்ற எண்ணூர் காவல்நிலையம் எண்ணூருக்கே மாற்றப்படும் எனக்கூறி இதுவரை மாற்றப்படவில்லை எனக்கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் கோகுல் கூறியதாவது,
தேர்தல் நேரத்தில் திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. திருவொற்றியூர் பகுதியில் அண்ணாமலை நகர் பாலம் கட்டி முடிக்கப்படவில்லை, திருவொற்றியூரில் அரசு பொறியியல் கல்லூரி வரும் எனக்கூறினர். ஆனால் ஐடிஐ மட்டுமே கொண்டு வரப்பட்டது. மேலும் எண்ணூர் காவல் நிலையம் இதுவரை மாற்றவில்லை. திருவொற்றியூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதுபோன்ற எந்த வாக்குறுதியையும் தமிழக அரசு நிறைவேற்றவில்லை என அவர் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்கு காவல் துறை அனுமதியளிக்காத நிலையில் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் திருவொற்றியூர் போலீசார் குவிக்கப்பட்டு அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 100 க்கும் மேற்பட்டோரை கைது செய்து அருகில் இருந்த திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் திருவொற்றியூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.