இரா.மோகன் மயிலாடுதுறை செய்தியாளர்.

மயிலாடுதுறை அருகே குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினர் இணைந்து பேரிடர் மீட்பு மற்றும் தற்காப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.
குத்தாலம் வட்டாட்சியர் இராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை (பொறுப்பு) லதா முன்னிலை வகித்தார் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடியிருந்த மாணவர்களுக்கு மத்தியில் பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் அந்த பொருட்களை எவ்வாறு பயன்படுத்துவது பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு மீட்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை நான்காவது பட்டாலியன் ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.குறிப்பாக இயற்கை பேரிடரின் போது காயம் அடைந்தவர்களை எவ்வாறு பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனை கொண்டு செல்வது,அதேபோல் சுயநினைவிழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சி.பி.ஆர் முதலுதவி சிகிச்சை அளிப்பது,நம்மைச் சுற்றி பயனற்று கிடக்கும் பொருள்களைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்டுச் செல்வது உள்ளிட்ட பயிற்சிகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் தீயணைப்பு மீட்பு துறையினர் சார்பாக குத்தாலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மாறன் தலைமையிலான குழுவினர் தீ விபத்து நேரிட்டால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது எனவும், தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது எனவும் தீயின் தன்மைக்கு ஏற்ப எந்தெந்த பொருட்களை பயன்படுத்தி தீனை அணைக்க வேண்டும் எனவும் செயல் விளக்கம் அளித்ததுடன் அதனை மாணவர்களையும் செய்ய வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரிடர் மீட்பு விழிப்புணர்வு மற்றும் தீ விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.