கரூர் செய்தியாளர் மரியான் பாபு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ரூ. 9.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்டத்தை வழங்கிய முன்னாள் அமைச்சர்..கரூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி கரூர் மாநகராட்சி வார்டு எண் 39க்குட்பட்ட பகுதிகளுக்கு நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. தலைமையில்17 பயனாளிகளுக்கு ரூ. 9.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கரூர் சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் ஆட்சியில் இத்திட்டத்தின் மூலம் “மக்களைத் தேடி அரசு” என்ற நிலையை உருவாக்கி உள்ளார்கள். பொதுமக்களுக்கு எந்த வித சிரமமுமின்றி வசிக்கும் பகுதிகளுக்கே அனைத்துத் துறைகளின் அதிகாரிகள் நேரில் சென்று, மனுக்களைப் பெற்று, கணினியில் பதிவேற்றம் செய்து அதற்கான உத்தரவுகளை அப்பகுதிகளிலேயே வழங்கும் ஒரு சிறப்பான திட்டமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் இத்திட்ட முகாமானது 179 இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 19.09.2025 வரை 128 முகாம்கள் நிறைவு பெற்றுள்ளது. இம்முகாம்கள் மூலம் இதுவரை 86,348 மனுக்கள் வரப்பெற்றுள்ளன. இதில் 30,512 மனுக்கள் கலைஞர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களாக பொதுமக்கள் அளித்துள்ளனர்.

இம்முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களுக்கும் 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். முதலமைச்சரின் ஆணைக்கிணங்க 45 நாட்களுக்குள் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டு தகுதியுடைய நபர்களின் கைகளில் நலத்திட்டங்களாக சென்று சேர்க்கப்படும்.

மேலும், முதலமைச்சர் கடந்த 2021 ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கரூர் மாவட்டத்தில் சிப்காட், ஐடி பார்க், மாநகராட்சி உட்கட்டமைப்பு பணிகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்து அதற்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

குறிப்பாக கரூர் மாவட்ட வளர்ச்சிக்காக தனிகவனம் செலுத்தி அதற்கேற்றாற்போல் வளர்ச்சித் திட்டப் பணிகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். இவ்வாறு கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற திட்ட முகாமில் வருவாய்த் துறையின் சார்பாக 5 நபர்களுக்கு வருமானச் சான்று, பிறப்பிடச் சான்று, வகுப்புச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்களையும், மாநகராட்சியின் சார்பாக 9 நபர்களுக்கு காலிமனை வரி விதிப்பு மற்றும் சொத்துவரி பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும் மற்றும் எரிசக்தி துறையின் சார்பாக 2 நபர்களுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றத்திற்கான ஆணைகளையும் மற்றும் கூட்டுறவுத் துறையின் சார்பில் 1 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 9.00 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளும் என மொத்தம் 17 நபர்களுக்கு ரூ. 9.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கரூர் சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.

இம்முகாமில் மாநகராட்சி மேயர் வெ.கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல்,மாநகராட்சி ஆணையர் கே.எம்.சுதா மற்றும் மண்டலக்குழு தலைவர்கள் ஆர்.எஸ்.ராஜா, எஸ்.பி.கனகராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *