மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ 9.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானம் புதுப்பிக்கும் பணி மற்றும் ரூ 12.50 கோடி மதிப்பீட்டில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு
ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு விளையாட்டுத் துறையில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விளையாட்டு மைதானங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள், நவீன உடற்பயிற்சி கூடங்கள், சட்டமன்ற தொகுதிகளில் முதலமைச்சர் சிறுவிளையாட்டு அரங்கங்கள், விளையாட்டு விடுதி கட்டடங்கள் என பல்வேறு விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட், பார்முலா 4 இரவு நேர சாலை கார் பந்தயம், ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி, ட்ரையத்தலான் போட்டி, ஆசிய அலைசறுக்கு போட்டி, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகளை சென்னையில் நடத்தி உலகின் முன்னணி விளையாட்டு நகராக சென்னையை உருவாக்கி வருகின்றார்.
அதன் அடிப்படையில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தமிழ்நாடு அரசுடன் இணைந்து வருகின்ற 2025 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜுனியர் உலகக்கோப்பை 2025 போட்டியை நடத்த உள்ளது. இதற்காக மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானம் ரூ 9.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய மைதானமாக புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ 9.47 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளியுடன் கூடிய வளைகோல் பந்து (ஹாக்கி) மைதானமாக புதுப்பிக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ 12.50 கோடி மதிப்பீட்டில் டைவிங் வசதியுடன் கூடிய நீச்சல் குளம் அமைக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு பணி முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மதுரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ 1.00 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள பாரா விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், பாரா விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வில் அவரிடம், பாரா விளையாட்டு வீரர்கள் தாங்கள் விளையாட்டு போட்டிகளில் வென்ற பதக்கங்களை காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாக ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி, பூமிநாதன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா,, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி,, மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.