எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சுற்றுவட்டார பகுதி கழிவு நீர் முழுவதுமாக மழை நீர் வடிகால் வழியே குளம்,வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளில் விடப்படும் அவலம். சுகாதார சீர்கேட்டுடன் நிலத்தடிநீர் பாதிக்கும் அபாயம்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் கோவில் பிரசித்தி பெற்ற கோவில் நகரமாகும் நவகிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமான தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது.பிரசித்தி பெற்ற கோவிலுக்கு நாள்தோறும் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இவ்வாறு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோவிலின் நகர் பகுதி முழுவதும் நூற்றுக்கணக்கான தங்கும் விடுதிகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் அமைந்துள்ளது.மேலும் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் குடியிருப்பு வளாகங்களும் அமைந்துள்ளது. ஆனால் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதி செய்யப்படவில்லை.

வைத்தீஸ்வரன் கோவில் தேரோடும் நான்கு வீதிகளில் துவங்கப்பட்ட வடிகால் பணிகளும் பாதியிலேயே நின்று போனது. இதனால் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் உள்ள மழை நீர் வடிகால், கழிவுநீர் கால்வாயாக மாற்றப்பட்டு பேரூராட்சியின் ஒட்டுமொத்த கழிவு நீரும் மழை நீர் வடிகால் வழியே அப்பகுதிகளில் அமைந்துள்ள குளங்கள் மற்றும் பாசன, வடிகால் வாய்க்கால்களில் கலந்து வருகிறது.
கோவிலை சுற்றி அமைந்துள்ள மூன்று குளங்கள் முழுவதுமாக கழிவு நீர் தேங்கும் குட்டையாக மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் தண்ணீரும் மழைநீர் வடிகால் விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஒவ்வொரு வீதியிலும் மழை நீர் வடிகாலில் தேங்கியுள்ள கழிவு நீரால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் குளங்கள், நீர் நிலைகளில் தேங்கும் கழிவு நீரால் சுற்றுப்பகுதியில் வசிக்கும் மக்கள் நோய்தொற்று, சுவாச கோளாறு என கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் தேங்கும் கழிவுநீரால் நிலத்தடி நீரின் தன்மையும் மாறி பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுள்ளது.
எனவே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி பகுதியில் மழை நீர் வடிகாலில், கழிவு நீர் கலைப்பதை தடை செய்யவும் நகர் பகுதி முழுவதும் கழிவுநீர் கால்வாய் அமைத்து சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.