இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மற்றும் குமரகுரு நிறுவனங்கள் சார்பில் “2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவது யார்?” என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், சிஐஐ தமிழ்நாடு மாநில கவுன்சிலின் தலைவர் ஏஆர் உன்னிகிருஷ்ணன் சிறப்பு உரை நிகழ்த்தி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

2047 ஆம் ஆண்டில் – இந்தியா சுதந்திரம் பெற்ற 100 ஆம் ஆண்டு – இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போதிருக்கும் மக்கள் தொகை 1.6 பில்லியன், மொத்த உள்நாட்டு உற்பத்தி $15–25 டிரில்லியன், தனிநபர் வருமானம் $10,000–15,000+, கல்வியறிவு விகிதம் 90% மற்றும் ஆயுட்காலம் 75–80 ஆண்டுகள் என கணிக்கப்பட்டுள்ளது.

“இத்தகைய நேர்மறையான முன்னறிவிப்புகளுடன், இன்றைய திறமையான மாணவர்களும் இளைஞர்களும் நாளைய இந்தியாவின் திருப்புமுனையாக இருப்பார்கள். அடுத்த 20–25 ஆண்டுகள் இந்தியாவின் பொற்காலமாக இருக்கும்; இளம் தலைமுறையே நாட்டின் வளர்ச்சிக் கதையை எழுதப் போகிறது,” என்று அவர் கூறினார்.

இந்தியா 2047க்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்றால், உற்பத்தித் துறை குறைந்தது 25% பங்கைக் கொள்ள வேண்டும் (தற்போது 12.5% மட்டுமே) என அவர் குறிப்பிட்டார். தமிழ்நாடு, இந்தியாவின் பொருளாதாரத்தில் 30% பங்களித்து வருவதையும், வாகன உற்பத்தி, கட்டுமானப் பொருட்கள், ரசாயனங்கள், சிமெண்ட், மின்னணுவியல், விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் சிறந்த சூழலை பெற்றிருப்பதையும் அவர் பாராட்டினார்.

மேலும், மின்னணுவியல் உற்பத்தி எதிர்காலத்தில் முக்கிய பங்காக இருக்கும் என்றும், மின்னணுவியல் வடிவமைப்பு உற்பத்தியை விட பெரிய துறையாக மாறும் என்றும் கூறினார். இத்துறையில் தமிழ்நாடு அதிக முதலீட்டை ஈர்த்துவருவதை அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தித் துறையில் பெரிய மாற்றங்கள் வரவிருப்பதாகவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (சூரிய, காற்று, அணுசக்தி) அதிக அளவில் பயன்படுத்தப்படும் என்றும், இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார். புதுமையான யோசனைகளுக்கு போதுமான நிதி உள்ளதால், ஸ்டார்ட்அப்கள் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவின் வளர்ச்சிக்குக் காரணமாகும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தகுதிகளை விட அறிவு மற்றும் திறமை முக்கியம் என்பதை வலியுறுத்திய அவர், எதிர்காலத்தில் IQ-வுக்குப் பதிலாக EQ (Emotional Quotient) அதிக முக்கியத்துவம் பெறும் எனக் கூறினார்.

“நீங்கள் அனைவரும் உண்மையான நேர்மறையான மனநிலையையும் சிறந்த மனப்பாங்கையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்; இதன் மூலம் வெவ்வேறு சூழ்நிலைகளைக் கையாளவும் அற்புதமான சாதனைகளை நிகழ்த்தவும் முடியும்,” என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *