கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சரிடம் மனு.!

தாராபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அமைச்சரிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தாராபுரத்தில் உள்ள மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் முகாம் அலுவலகத்தில், கொளத்துப்பாளையம் சிப்காட் எதிர்ப்புக்குழு மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

தாராபுரம் வட்டம், கொளத்துப்பாளையம் பகுதியில் 58 ஏக்கர் நிலத்தில் கூட்டுறவு நூற்பாலை பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது. தற்போது இந்த நூற்பாலை நிலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நில உரிமை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அமராவதி ஆற்றுப் பாசனத்தாலும், நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசனத்தாலும், உடையார்குள நீர் பாசனத்தாலும் நீர் வளம் நிலவளம் மிகுந்து, நெல் விளையும் நன்செய் நிலங்களாக செழிப்பாக விவசாயம் நடைபெறும் பகுதியாக கொளத்துப்பாளையம் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் தொழிற்சாலைகளின் கழிவுநீர் அமராவதி கொளிஞ்சிவாடி ஆயக்கட்டு பாசனக் கால்வாய் வழியாக அமராவதி ஆற்றில் கலக்க வாய்ப்பு உள்ளதால், கரூர் வரை உள்ள ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கும், பொதுமக்களும், கால்நடைகளுக்கும் உயிர் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

சிப்காட் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ள உடையார் குள நீர்ப் பாசன விவசாயிகளும், மற்ற குடிநீர் ஆதாரங்களும் பாதிப்படையும். மேற்படி சிப்காட் தொழிற்பேட்டையின் கழிவுநீர் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க கால்வாய்களில் தொழிற்சாலைககளின் கழிவுநீர் கலக்கப்பட்டு, நத்தப்பாளையம் வரை உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் பாதிப்படைவர்.

மேலும், இப்பகுதியில் இருந்து தமிழ்நாட்டிலேயே அதிக அளவு சுமார் 30-க்கும் மேற்பட்ட விதை நெல் உற்பத்தி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களில் இருந்து கேரளா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய வெளி மாநிலங்களுக்கும் விதை நெல் அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு அனுப்பப்படும் விதை நெல்லின் முளைப்புத் திறன் மாசுபாட்டின் காரணமாக, உற்பத்தித் திறன் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.

எனவே, கொளத்துப்பாளையம் சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை ரத்து செய்வதோடு, சிப்காட் நிறுவனத்துக்கு மேற்படி நில உரிமை மாற்றம் செய்கின்ற உத்தரவையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். இந்த மனு கொடுக்கும் நிகழ்ச்சியில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமார், தீபக், கோனேரிப்பட்டி பாலு, பாஜக மாவட்ட செயலாளர் கார்த்தி, தமாகா மாவட்டத் தலைவர் காளிதாஸ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *