தாராபுரம் அருகே நடுவாய்க்கால் ஆக்கிரமிப்பு – விவசாயிகள் மனு, வழித்தடத்தை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தல்!.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சி, ஆலம்பாளையம் கிராமத்தில், சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் நன்செய் நிலங்கள் உள்ளன. இதில் சிறு, குறு விவசாயிகள் பலர், நெல், அவரை, வெண்டை, தக்காளி, மிளகாய், கத்திரிக்காய் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து, அதனை ஒட்டன்சத்திரம் மற்றும் தாராபுரம் சந்தைகளில் மொத்தமாக விற்பனை செய்து, தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆத்துக்கால் புதூர் நடுவாய்க்கால் பகுதியில் மேற்கிலிருந்து கிழக்காகச் செல்லும் தடத்தை, சிலர் ஆக்கிரமித்து, மரங்கள் மற்றும் மாட்டுக் குட்டகைகள் அமைத்து விட்டனர். இதனால், தெப்பக்குளி பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்து வரும் நிலையில், விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாகனங்கள் மற்றும் மாட்டுவண்டிகள் செல்ல முடியாமல் தடைகள் ஏற்பட்டுள்ளன.

1873ஆம் ஆண்டு முதல் நில அளவும், 1964ஆம் ஆண்டு மறு நில அளவும் செய்யப்பட்டு, அரசு அப்பகுதி விவசாயிகளுக்காக வழங்கிய வழிப்பாதையை மீட்டு தர வேண்டும் என, மாவட்ட ஆட்சித் தலைவர் நாரணவரே மனீஷ் ஷங்கர் ராவிடம், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுத்து முறையிட்டனர்.

ஆட்சித் தலைவர் மனுவை பெற்றுக் கொண்டு விரிவாகப் படித்து, தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கத்திடம் பரிந்துரை செய்தார். பின்னர், விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து, தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்குச் சென்று, கலெக்டர் வழங்கிய மனுவின் நகலை வழங்கி, நடவடிக்கை எடுத்து தருமாறு கோரிக்கை வைத்தனர். அதன்பின், பொதுப்பணித்துறை அலுவலகத்திலும் மனு கொடுத்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டதாவது:
“திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், ஆலம்பாளையம் கிராமம் (ச.நி. எண் 61), கொளத்துப்பாளையத்திலிருந்து ஆத்துக்கால் புதூர் செல்லும் சாலையின் (புல எண் 932) மையப்பகுதியில் மேற்கிலிருந்து கிழக்காகச் செல்லும் நடுவாய்க்கால், புல எண்கள் 267, 970, 998 ஆகியவற்றின் வழியாகச் செல்கிறது. வாய்க்கால் கரையோரப் பாதையின் வழியாக சுமார் 500 ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இந்நிலங்களில் சிறு, குறு விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால், ஆக்கிரமிப்பு காரணமாக உரம், விளைபொருட்கள் ஆகியவற்றை தலையில் சுமந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. சுமை ஒன்றுக்கு 500 ரூபாய் கூலி கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால், லாபம் குறைந்து, மீண்டும் மீண்டும் கடன் வாங்கி விவசாயம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசு வழங்கிய வழித்தடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு வழங்கினால் மட்டுமே, அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் நிலையாக இருக்கும்.” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவில், விவசாயிகளான முகமது அனிபா, காசி ஜாபர் அலி, அப்பாஸ் அலி, சுப்பிரமணி சேட்டு, சாகுல் ஹமீத் ராஜா, முகமது தவ்ஹீத் ராஜா உள்ளிட்டோர் கையெழுத்திட்டு கலந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட விவசாயி திரு. முகமது அனிபா பேசியதாவது:
“வழித்தடம் இன்றி நாங்கள் பெரும் சிரமத்தில் சிக்கியுள்ளோம். ஆக்கிரமிப்பு நீக்கப்பட்டு, வழிப்பாதை மீட்டுக் கொடுக்கப்பட்டால்தான் எங்கள் விவசாய வாழ்வு காப்பாற்றப்படும்” எனக் கோரிக்கை விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *