திருச்சி உறையூர் எஸ் எம் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் ஏழு நாள் சிறப்பு முகாம் சீராதோப்பு பாரதியார் குருகுல வளாகத்தில் டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு தலைப்பில் நடைபெறுகிறது. முகாமில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மீண்டும் மஞ்சள் பை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசுகையில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகள் சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இவற்றைத் தவிர்த்து மஞ்சப்பை போன்ற மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்த அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நெகிழிப் பைகள் மட்காமல் நிலத்திலும் நீரிலும் பல நூறு ஆண்டுகள் தங்கி, மண், நீர், காற்று ஆகியவற்றை மாசபடுத்துகின்றன.
மஞ்சப்பையைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்.
நெகிழிப் பைகளில் வைக்கும் உணவுப் பொருட்கள் வேதியியல் மாற்றம் அடைந்து, உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகின்றன. மஞ்சப்பை இந்த ஆபத்துகளைத் தவிர்க்க உதவுகிறது.
ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்குத் தடை விதிப்பதோடு, அதற்கு மாற்றாக நெகிழி இல்லாத பிற பொருட்களைப் பயன்படுத்தவும் மஞ்சப்பை இயக்கம் ஊக்குவிக்கிறது.
சமூக ஒருங்கிணைப்பு: உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையாளர்கள், நுகர்வோர், அரசு என அனைவரும் கைகோர்ப்பதன் மூலம் இந்த இயக்கத்தை வெற்றியடையச் செய்யலாம்.தமிழக அரசு, பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் நோக்கில், “மீண்டும் மஞ்சப்பை” என்ற இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கத்தின் கீழ், நெகிழிப் பயன்பாட்டின் தீமைகள், மாற்றுப் பொருட்களின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்குப் பாடல்கள், நாடகங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இது தொடர்பான விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. நெகிழிப் பைகளுக்குப் பதிலாக மஞ்சப்பைகளைப் பயன்படுத்துவது ஒவ்வொரு தனிநபரின் கடமையாகும்.
இதன் மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், வருங்கால தலைமுறையினருக்கு ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை உறுதிசெய்ய முடியும் என்றார். முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஸ்ரீதர் வரவேற்க, நிறைவாக விக்ரம் வீரப்பன் நன்றி கூறினார்.