தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் பகுதியில் குடிநீர் விநியோகம் தொடர்பாக அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்.!
தாராபுரம்,குண்டடம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில், சீராக குடிநீர் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் குண்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் தாலுகா, குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 24 ஊராட்சிப் பகுதிகளில் சுமார் 90 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து போதுமான குடிநீர் கிடைப்பதில்லை என இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். அதிலும் நந்தவனம்பாளையம், சடயபாளையம், கெத்தெல்ரேவ், கொக்கம்பாளையம், மோளரப்பட்டி உள்ளிட்ட 13 ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகம் நிலவி வருவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, குண்டடம் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுவதற்காக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்தார்.
இதில், காங்கயம் மற்றும் தாராபுரம் பகுதி குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரியம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ருத்ராவதி பேரூராட்சி ஆகிய அலுவலர்களைக் கொண்ட முத்தரப்பு கமிட்டி அமைத்து, இன்னும் 2 வாரத்துக்குள் குண்டடம் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்து, இது தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என, அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவுறுத்தினார்.
இந்தக் கூட்டத்தில் குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், நாகலிங்கம், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜா, குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன் மற்றும் ஊராட்சி செயலர்கள், பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.