துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமிய மக்கள் புதிய நிர்வாக குழு அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். துறையூர் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ளது
“யௌமியா பள்ளிவாசல்”. இங்கு கடந்த 25 ஆண்டுகளாக வரவு செலவு கணக்குகளில் முறைகேடு நடப்பதாகவும் அதனால் மாவட்ட வஃபு வாரிய நிர்வாகம் உடனடியாக நிர்வாக கமிட்டி அமைக்க வேண்டும் என்று கடந்த 28-09-2025 அன்று ஜமாத்தார்கள், இஸ்லாமிய மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“யௌமியா பள்ளிவாசல்” ஒருங்கிணைப்பு குழு தலைவர் அயூப்கான் கூறுகையில் கடந்த 25 ஆண்டுகளாக பள்ளிவாசலை எந்தவிதமான பராமரிப்பு பணிகள் செய்யாமலும்,வரவு செலவு கணக்குகளை ஜமாத்தாரிடம் வழங்காமல் முத்தவல்லி கமர்தீன் என்பவர் இருந்து வருகிறார்.அவரின் சர்வாதிகார போக்கிற்கு ஜமாத்தார்கள் கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பதாக கூறினார்.
அவரிடம் இருந்து பள்ளிவாசலை பாதுகாக்க வஃபு வாரிய சட்ட விதிகள் படி நிர்வாக குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதில் சர்தார் ஜான், ஜாகிர் உசேன்,அயூப் கான் உள்ளிட்ட இஸ்லாமிய மக்கள் ஆண்கள், பெண்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் தினேஷ், ராஜதுரை உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்