திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு சார்பில் திருச்சியில் மகாத்மா காந்தி
ஓர் பார்வை, ஓர் பயணம் நிகழ்ச்சி மகாத்மா காந்தியின் 156 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி வரலாற்று குழு நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் சங்க கால நாணயங்கள் சேகரிப்பாளர் பாண்டியன் குடியரசு இந்திய நாணயங்கள் சேகரிப்பாளர் இளம்வழுதி பள்ளி மாணவர் விஷ்வா உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். திருச்சிராப்பள்ளி காந்தி சந்தை குறித்து வரலாற்று குழு தலைவர் விஜயகுமார் பேசுகையில்,திருச்சிராப்பள்ளியில் 1868 முதலே சிறிய அளவில் சந்தை செயல்பட்டுவந்துள்ளது.
அடுத்துவந்த 50 ஆண்டுகளில் திருச்சி நகரின் மக்கள்தொகை பெருகியதையடுத்து, 1927ஆம் ஆண்டு இந்த சந்தை விரிவுபடுத்தப்பட்டது. அப்போது நீதிக்கட்சியின் துணைத் தலைவராக இருந்த ரத்தினவேல் தேவர், திருச்சி நகராட்சித் தலைவராக இருந்தார். அப்போது சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழகம் வந்த காந்தியை அழைத்துவந்து விரிவுபடுத்தப்பட்ட சந்தைக்கு 17-9-1927இல் மகாத்மா காந்தியைக் கொண்டு காந்தி மார்க்கெட் அஸ்திவாரக்கல் நாட்டப்பட்டது .
அதன் கல்வெட்டு காந்தி சந்தை முகப்பு சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. 9-2-1940 அன்று திருச்சிராப்பள்ளி முனிசிபாலிட்டி காந்தி மார்க்கெட் ராஜகோபாலாச்சாரியாரால் திறந்து வைக்கப்பட்டது. அதன் கல்வெட்டும் காந்தி சந்தையின் நுழைவாயில் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.காந்தி இந்தச் சந்தைக்கு அஸ்திவாரக்கல் வைத்த நாள் முதல் அவரது பெயரிலேயே காந்தி மார்கெட் என அழைக்கப்படத் தொடங்கியது.
மகாத்மா காந்தியின் மரணத்துக்குப் பிறகு மார்கெட்டின் நுழைவாயிலில் அவரது நினைவாக அமைக்கப்பட்ட ஒரு மார்பளவு உருவ சிலையை, 1953 அக்டோபர் 30 அன்று அன்றைய தமிழக முதல்வர் ராஜாஜி திறந்துவைத்தார் என்றார்.