எபி.பிரபாகரன் பெரம்பலூர்
செய்தியாளர்
பெரம்பலூர்.அக.06. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளின நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொட்டரை ஊராட்சியில் மருதையாற்றின் குறுக்கே ரூ.92.70 கோடி மதிப்பில் சுமார் 815 ஏக்கர் பரப்பளவில் 212.475 மில்லியன் க.அடி நீர் தேக்கும் வகையில் கொட்டரை நீர்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த அணையின் நீளம் 2,360 மீட்டர் ஆகும். இரண்டு பாசன மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. 9.91 கி.மீ. நீளம் உள்ள இடதுபுற கால்வாய் மூலம் 3,188 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கும், 6.73 கி.மீ. நீளம் உள்ள வலதுபுற கால்வாயால் 1,006 ஏக்கர் புன்செய் நிலங்களுக்கும் பாசன வசதி வழங்குவதால் 4830.38 டன் உணவு உற்பத்தி ஏற்படும்.
இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் இடதுபுற கால்வாய் வழியாக கொட்டரை, ஆதனூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், தொண்டபாடி, அழகிரிபாளையம் மற்றும் அரியலூர் ஆகிய ஊர்களும் வலதுபுற கால்வாய் மூலம் கொட்டரை, ஆதனுர், கூடலூர் மற்றும் சாத்தனூர் ஆகிய ஊர்களும் பயனடையும்.இந்த நீர்த்தேக்கமானது, கொட்டரை, ஆதனூர், சாத்தனூர், கூடலூர், புஜங்கராயநல்லூர், கூத்தூர், அழகிரிபாளையம், தொண்டப்பாடி, பிலிமிசை ஆகிய 9 கிராமங்கள் பயனடையும் வகையிலும், சுமார் 4,194 ஏக்கர் பரப்பளவில் விவசாய பாசனம் பெறும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.
இந்த கொட்டரை நீர்த்தேக்கத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், நீர்த்தேக்கத்திற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு வரும் நிலம் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையிலான சாலை மற்றும் நீர் வெளியேறும் பாசன வாய்க்கால் உள்ளிட்டவைகள் குறித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் அவர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விவசாய நிலத்திற்கு செல்வதற்காக தற்காலிகமாக்மைக்கப்பட்ட சிறுபாலம் சேதமடைந்த நிலையில் உள்ளதால், விவசாய பணிகளுக்காக சென்று வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது எனவும், ஆடு, மாடுகளை ஓட்டி செல்வதற்கு சிரமமாகவும், இரு சக்கர வாகனங்களின் மூலம் மறு பக்க செல்ல முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், சிறு பாலத்தை சீரமைத்து கட்டி தருமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
இது குறித்து பாலம் கட்டுவதற்குண்டான வாய்ப்புகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, பாலத்தின் அளவீடுகளை அளந்து பார்த்து விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்