தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் முழுவதும் அரசு அனுமதி பெறாமல் நடத்தப்படும் வெடிகடைகள் மற்றும் வெடி தயாரிக்கும் இடங்களை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து காவல் ஆய்வாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை வலங்கைமான் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீஸ்காரர்கள் வலங்கைமான் அருகே உள்ள ஆண்டாங்கோயில் பகுதியில் உள்ள ராஜப்பா மகன் ராஜபாண்டியன் ( 35) என்பவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டில் அரசு அனுமதி பெறாமல் தயாரிக்கப்பட்ட வெடிகள் 800 கிலோ மற்றும் வெடி தயாரிக்க பயன்படும் வெடி மருந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வெடி மற்றும் வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து ராஜபாண்டியனை கைது செய்தனர்.
எஸ்பி கடும் எச்சரிக்கை:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உரிமம் பெறாமல் வெடிகடைகளை நடத்துவது, பாதுகாப்பு இன்றியும் அரசு அனுமதி பெறாமலும் வெடி பொருட்களை தயாரிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்பி கருண் கரட் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.