திருவாரூர்., ஏப்ரல்.04

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 15ஆம் தேதி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்தது. இதனையடுத்து உடனடியாக தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் உருவப்படங்கள், சிலைகள் ஆகியவை திரை கொண்டு மூடப்பட்டும், சுவர் ஓவியங்கள் வண்ணம் கொண்டு அழிக்கப்பட்டன.

பல்வேறு கட்சிகளின் கோரிக்கையை ஏற்று மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைப்பதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இதனால் மறைந்த தலைவர்களின் சிலைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக வைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமான உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

இதனை தேர்தல் நடத்தும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எவரும் கண்டு கொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பிட்ட கட்சியின் சின்னத்தை மறைப்பது விதியாக இருக்கும் நிலையில், அதை செயல்படுத்தாமல் இருக்கும் அதிகாரிகளின் இந்த செயல் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து மேலும் விசாரித்த போது… திருவாரூர் நகரின் மையப்பகுதியில் இருந்த பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு ரூபாய் 16.30 கோடி செலவில் நவீன வசதியுடன் புனரமைக்கப்பட்டு, கடந்த அக்டோபர் மாதம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நகர்ப்புற பேருந்து நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு திறக்கப்பட்டது.

திறக்கப்பட்ட முதலே பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அமர்வதற்கு வசதியாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வடிவிலான 4 இருக்கைகள் மட்டும் போடப்பட்டிருந்தன.

நாளொன்றுக்கு 3000க்கும் அதிகமான பொதுமக்கள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் போடப்பட்டிருக்கும் இருக்கை வசதிகள் போதவில்லை என பொதுமக்கள் கூறிவந்தனர்.

ஆனால் இது தொடர்பாக கடந்த 7 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மார்ச் 15ஆம் தேதிக்கு, இரண்டு நாட்களுக்கு முன்பாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் சிமெண்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டன.

இந்த சிமெண்ட் இருக்கைகள் அனைத்திலும் இரு புறங்களிலும் உதயசூரியன் வடிவிலான சின்னங்கள் வரையப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு 20 நாட்களுக்குப் பிறகும் அதிகாரிகள் கண்டும் காணாமல் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *