திருவண்ணாமலை மாவட்டம், மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பரசுராமனின் இரண்டாவது மகன் கோபால் (23). வறுமை காரணமாக, ஸ்ரீபெரும்புதூர் மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் கார் உதிரிபாகத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு வருடங்களாக மெஷின் ஆபரேட்டராகப் பணிபுரிந்து வந்தார்.

வேலைக்குச் சென்ற கோபால், இன்று எதிர்பாராத விதமாக தான் இயக்கி வந்த ராட்சத இயந்திரத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். உடனே தண்டலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மகனின் மரணச் செய்தி கேட்டு துடிதுடித்து ஓடிவந்த தாய் மீனா, காவல் நிலையத்தில் தன் மகனின் பெயரைச் சொல்லி “கோபாலு… கோபாலு…” என நெஞ்சு வெடிக்கக் கதறி அழுதார்.
அழுது அழுது மயங்கி விழுந்த அந்தத் தாயின் முகத்தில் அங்கிருந்தவர்கள் தண்ணீர் தெளித்து, குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். ஆனால், மயக்கம் தெளிந்து எழுந்த அடுத்த கணமே, மீண்டும் தன் மகனை நினைத்து காவல் நிலைய தரையில் உருண்டு திரண்டு அவர் அழுத சத்தம், அங்கிருந்த போலீசாரையும் பொதுமக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

இந்தக் கோர விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொழிற்சாலையின் அலட்சியம் ஏதேனும் உள்ளதா, போதிய பாதுகாப்பு வசதிகள் இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

வயிற்றுப் பிழைப்புக்காக வந்த இடத்தில், ஏழைத் தொழிலாளியின் உயிர் பறிபோன சம்பவமும், அந்தத் தாயின் கண்ணீரும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *