சென்னை, திருவொற்றியூர்:
திருவொற்றியூர் அரசு கல்லூரியில், இந்திய மாணவர் சங்கம் (எஸ்.எப்.ஐ.) அமைப்பைச் சேர்ந்த சுமார் 20 மாணவர்கள் கையில் கொடியுடன் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து, நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாணவர்களை போராட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் இருந்த காவல்துறையினர் மற்றும் எஸ்.எப்.ஐ. மாணவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் காவல் ஆய்வாளர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள், எஸ்.எப்.ஐ. மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர், எஸ்.எப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இமானுவேல் சஞ்சய் உள்ளிட்ட நான்கு மாணவர்களை காவல்துறையினர் காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அரசு கல்லூரி மாணவர்களை போராட்டத்திற்கு அழைப்பது குறித்து போலீசார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருதரப்பினருக்கும் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கல்லூரி நுழைவாயிலில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நேற்று திருவொற்றியூர் அரசு கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எப்.ஐ. மாணவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, பின்னர் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்ததாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 50-க்கும் மேற்பட்ட எஸ்.எப்.ஐ. மாணவர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.
தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.