நாகப்பட்டினம்,ஜூலை.29-
திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் உள்ள பயணிகள் நிழலக கட்டிடம் சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.


பயணிகள் நிழலக கட்டிடம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி வீரப்பெருமாநல்லூர் கிராமத்தில் திருவாரூர்- திருமருகல் மெயின் சாலையில் பயணிகள் நிழலகம் அமைத்துள்ளது. இந்த நிழலகத்தில் வீரப்பெருமாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் காத்திருந்து திருமருகல், நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பஸ் ஏறி சென்று வருகின்றனர். இந்த நிழலக கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் தற்போது பஸ் நிழலக கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் வீரப்பெருமாநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் இந்த நிழலகத்தில் காத்திருந்து பஸ் ஏற முடியாமல் மழை, வெயிலில் நின்று அவதிப்படுகின்றனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், அரசு ஊழியர்களும், விவசாயிகள், மருத்துவமனை செல்லும் நோயாளிகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.


நடவடிக்கை
இந்த ஆபத்தான கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே இந்த ஆபத்தான கட்டிடத்தால் ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் முன் உடனடியாக பழுதடைந்த இந்த கட்டிடத்தை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *