மேகதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயற்சி செய்த உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமியை கைது செய்ய போலீசார் முயன்றதால் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் பரபரப்பு ஏற்பட்டது
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அணை கட்டி, தமிழ்நாட்டின் உரிமைப் பங்கீட்டு நீரை தடுத்து நிறுத்த முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் அறிவித்தது.
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் பூக்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்காக கேரள மாநிலம், கொச்சின் துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் நோக்கி தமிழ்நாடு வழியாக கொண்டு செல்லப்படும் சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சங்கம் தெரிவித்தது.
இந்தப் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நாமக்கல் மாவட்டம். பரமத்தி வேலூர் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தமிழக உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமியை கைது செய்யுமாறு போலீசார் வற்புறுத்தினர்.
அப்போது கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் மற்றும் பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த வேலுசாமி, மேகதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நீர் உரிமையை பாதுகாக்க தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்தச் சம்பவத்தால் பரமத்தி வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.