கல்பாக்கம், ஆக. 8:
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணையில் குப்பைக் கழிவுகள் குவிந்து கிடப்பதால், அவற்றை உடனடியாக அகற்றி, தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாயலூர், கடலூர், ஆயப்பாக்கம், நல்லாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. இந்த தடுப்பணை அமைக்கப்பட்டதன் மூலம், அப்பகுதியில் நிலத்தடி நீரில் இருந்த உப்புத்தன்மை குறைந்து, தூய்மையான குடிநீர் கிடைக்கத் தொடங்கியது. இதனால், உப்புத்தன்மை காரணமாக விவசாயம் செய்ய முடியாமல் இருந்த பல நிலங்கள் மீண்டும் விவசாய பயன்பாட்டுக்கு வந்ததுடன், அப்பகுதியில் விவசாயமும் செழித்து வருகிறது.
மேலும், கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களுக்கும் பாலாற்று நீர் முக்கிய நீராதாரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கிழக்கு கடற்கரைச் சாலையின் இருபுறமும் பரந்து விரிந்து காணப்படும் வாயலூர் தடுப்பணை, மழைக்காலங்களில் நீர் நிரம்பும்போது இயற்கை எழில் கொஞ்சும் இடமாக விளங்குகிறது. கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்லும் வெளியூர் பயணிகள், தடுப்பணையின் அழகிய காட்சியை ரசிப்பதுடன், குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுடன் அங்கு நின்று புகைப்படம் எடுத்துச் செல்வதும் வழக்கம்.
ஆனால், தற்போது தடுப்பணையில் தண்ணீர் வற்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. தடுப்பணை பகுதியில் பழைய துணிகள், பாட்டில்கள், இறைச்சிக் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதுடன், கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், வரும் பருவமழையின்போது தடுப்பணையில் நீர்த்தேக்கம் ஏற்படுவதற்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
தற்போது பருவமழை தொடங்க உள்ள நிலையில், தடுப்பணையில் நீர்த்தேக்கம் ஏற்படுவதற்கு முன்பாக குப்பைக் கழிவுகளை முழுமையாக அகற்றுவது அவசியம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, அரசு அதிகாரிகள் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலைய நிறுவனங்கள் இணைந்து வாயலூர் தடுப்பணையை உடனடியாக நேரில் ஆய்வு செய்து, அங்கு குவிந்துள்ள குப்பைக் கழிவுகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை அகற்றுவதுடன், தடுப்பணையைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும். மேலும், குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.