மன்னார்குடி., அக்.06
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 47 தென்பாதி பகுதியில் செயல்படும் மதுபானக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
47 தென்பாதி துளசேந்திரபுரம் சாலையில் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
மதுபானக்கடையை சுற்றியுள்ள பகுதியில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும் சூழல் உள்ளதாகவும், பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அந்த வழியாக செல்லும்போது பாதுகாப்பற்ற நிலை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால், மதுபானக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் முத்துப்பேட்டை–மன்னார்குடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என மக்கள் உறுதியாக தெரிவித்தனர். இதையடுத்து, ஒரு மாதத்திற்குள் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக்கடை மூடப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பின்னர் முத்துப்பேட்டை–மன்னார்குடி சாலையில் போக்குவரத்து சீரானது.