சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 35). இவர் சென்னை மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்து வந்தார். கடந்த 19-ந்தேதி இவர் தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரெயிலில் பழ வியாபாரம் செய்தார். இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் சைதாப்பேட்டை ரெயில் நிலையத்தில் நின்ற போது பயணிகளுடன் ராஜேஸ்வரியும் இறங்கினார். அப்போது, ராஜேஸ்வரியை பின் தொடர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் தான் மறைத்து வந்திருந்த அரிவாளால் திடீரென்று அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ராஜேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவு மூலம் கொலையாளிகளை தேடி வந்தனர். இதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேஸ்வரியை அவரது தங்கை நாகவள்ளி, அவரது கணவர் சக்திவேல் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஸ்வரி கொலை தொடர்பாக நாகவள்ளி, சக்திவேல் மற்றும் சூர்யா, ஜெகதீசன், ஜான்சன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாம்பலம் ரெயில் நிலையத்தில் சக்திவேல் உள்ளிட்ட சிலருக்கும் வேறு சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்த நிலையில், ராஜேஸ்வரி இந்த விவகாரத்தில் தலையிட்டு சக்திவேல் உள்ளிட்ட சிலர் மீது வழக்கு போட செய்தார். இது சக்திவேல் தரப்பினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் சக்திவேல் ராஜேஸ்வரியின் தங்கை நாகவள்ளியை காதலித்து திருமணம் செய்தார். இதை அறிந்த ராஜேஸ்வரி சக்தி வேலையும், நாகவள்ளியையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டினார்.

இதனால் ராஜேஸ்வரி மீது ஆத்திரம் அடைந்த சக்திவேல் தனது மனைவி நாகவள்ளி மற்றும் நண்பர்கள் சூர்யா, ஜெகதீஷ், ஜான்சன் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. கைதான 5 பேரிடம் இருந்தும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. கைதான நாகவள்ளி போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:- நான் ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வசித்து வந்தேன். இந்த சூழலில் சக்திவேலுக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். இது எனது அக்காள் ராஜேஸ்வரிக்கு பிடிக்கவில்லை. அவள் அடிக்கடி என்னிடம் தகராறு செய்துவந்தாள். சக்திவேலுடன் என்னை வாழ விடமாட்டேன் என்று மிரட்டிவந்தாள். அவளது மிரட்டலால் சக்திவேலுடன் வாழ முடியாதோ என்று எண்ணினேன். இதனால் சக்திவேலிடம் “நான் உனக்கு முழுமையாக வேண்டுமா? அப்படி என்றால் எனது அக்காளை கொன்றுவிடு” என்று கூறினேன். இதனால் சக்திவேல் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராஜேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தோம். ராஜேஸ்வரி தினமும் வியாபாரம் செய்யும் ரெயிலை நோட்டமிட்டோம். அவள் வரும் நேரத்தையும், எங்கு வைத்து கொலை செய்யலாம்? என்றும் ரகசியமாக ஆலோசித்தோம். அதன்படி ரெயிலில் பழ வியாபாரம் செய்துவிட்டு வந்தபோது சக்திவேல் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து எங்கள் திட்டப்படி கொலை செய்தனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *