தென்காசி மாவட்டத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.10- லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் வழங்கினார்.
தென்காசி மாவட்ட ஆட்சியாக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர்
துரை.இரவிச்சந்திரன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக ஆய்வு கூட்டம் மற்றும் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் ஒரு பயனாளிக்கு ரூ.2,05,000 விபத்து மரண உதவி தொகை, 11 பயனாளிகளுக்கு ரூ.4,50,000 இயற்கை மரண உதவி தொகை, 17 பயனாளிகளுக்கு ரூ.2,93,000 திருமண உதவி தொகை, 8 பயனாளிகளுக்கு ரூ.40,200 கல்வி உதவி தொகை,8 பயனாளிகளுக்கு ரூ.13,000 ஓய்வூதியம் என மொத்தம் 50 பயனாளிகளுக்கு ரூ.10,06,200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்குமார் தெரிவித்ததாவது;-
தமிழ்நாடு முதலமைச்சர் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள் காலதாமதமின்றி சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.
பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்து அக்குறைகளுக்கு தீர்வு காண மாவட்டம் தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பதிவுப்பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான நலத்திட்ட உதவி தொகை உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறையில் தேசிய அளவில் சாதிக்கும் கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.25,000 சர்வதேச அளவில் சாதிக்கும் கட்டுமான தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ரூ.50,000 வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் ரூ.500 கோடிக்கும் மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யாதவர்கள் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று பயனடைய வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தென்காசி தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) நா.முருகப்பிரசன்னா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன், மற்றும் அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.